பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்மானச் சூறைக்காற்று

மாண்புமிக்க கலைஞர் மு. க. அவர்கள் 26 - 5 - 69 இல் தகடுரில் நிகழ்த்திய பெரியார் சிலை திறப்புப் பேச்சு இது. இயல்பாகவே இலக்கியத் தகுதி பெற்ற அப்பேச்சுக்குக் கவிதை உருவம் கொடுத்திருக்கிறேன்.

பள்ளிக்குச் செல்லென்றார் பெற்றோர்; நானோ
பகுத்தறிவுப் பள்ளிக்குள் நுழைந்து விட்டேன்.
எள்ளிநகை யாடிநின்றார் ஊரார்; மேலும்
இவனெங்கே உருப்படுவான் என்றும் சொன்னார்,
வெள்ளிநரை ஈரோட்டுத் தாடிச் சிங்கம்
விளையாடும் மற்களத்தில் உருவம் பெற்ற
மள்ளன்நான் உருப்பட்ட சேதி, இந்த
மண்ணறியும்; அறியாதா தமிழர் நாடு?

எங்கெங்கு மதமடமை யுண்டோ, சாதி
எங்கெங்குக் குரல்வளையை நெறிப்பதுண்டோ,
எங்கெங்குப் புராணங்கள் க்டவுள் பேரால்
இந்நாட்டில் கொத்தடிமை வளர்ப்பதுண்டோ,
அங்கெல்லாம் துள்ளிவரும் வேலைப் போல
அறிவுலகத் தந்தையிவர் பறந்து சென்றார்.
இங்கெவர்க்கும் அஞ்சாமல், வெடித்துப் பாயும்
ஏவுகணைச் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.