பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்றான் தோட்டத்து
மல்லிகை

ந்த நூற்றாண்டு இருபெரும் வீரரைத் தோற்றுவித்தது. அவர்களுள் ஒருவன் நெப்போலியன்; மற்றொருவன் ஜியார்ஜ் கார்டன் லார்டு பைரன்’ என்று, பைரன் இறந்தபோது ஐரோப்பியத் தாளிகைகள் கண்ணீர் எழுத்துக்களைக் காட்டி வருந்தின.

கால் ஊனம் பெற்ற இக்காதல் கவிஞனின் அழகு, எந்தப் பெண்ணாலும் எதிர்க்க முடியாத ஆற்றலைப் பெற்றது. நான்கும் இருபதும் நடந்த வயதில், உலகம் போற்றும் வான் புகழை இவன் வாரிக்கொண்டவன். கொலைக்கஞ்சாப் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து, கலைக்கஞ்சா மயக்கத்தில் கடைசிவரை வாழ்ந்து, முப்பத்தாறில் தன் மூச்சை முடித்துக் கொண்டவன்•

இவன் காதலிப்பான்; ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுவான். இவன் காதல் இலக்கு எப்போதும் குறிதவறிப் போனதில்லை. தான் விரும்பும் பெண்ணின் காதலைப் பெறத் தேனழிக்கும் வேடுவன்போல் இவன் நெருப்புப் போராட்டம் நடத்துவான்: தேனைப் பிழிந்து கொண்டதும் அடையை இரக்கமின்றி வீசி எறிந்து விடுவான். எந்தக் கம்பத்துக்கும் கட்டுப்படாத மத யானை இவன். இந்தக் கடகளிற்றைத் தன் கட்டுத்தறியில் சிலையாகக் கடைசிவரை கட்டி நிறுத்திய பெருமை இத்தாலி காட்டு முத்தார அழகி தெரிசாவையே சாரும்.