பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3



இதனை அசல் நாட்டுப்பாடல் என்று சொல்லுகிறோம் மக்களது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் இலக்கிய மெருகோடு சித்தரிக்கும் பாடல்களும் உள்ளன. பள்ளுப்பாடல்களில் பள்ளர்களின் வாழ்க்கையும், குறவஞ்சியில் குறவர்களின் வாழ்க்கையும் அனுதாபத்தோடு சித்தரிக்கப்படுகிறது. அவை உழைப்போர் வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு எடுத்துச்சொல்லும் விளக்கமாகவே இருக்கின்றன. அவை கிராம மக்களின் நாவிலே பயிலுவதிலை கிராம மக்கள் அப்பாடல்களின் பொருள்களையும், உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளமுடியாது, ஏனெனில் அவை மக்கள் மொழியில் இல்லை. கடினமான சொற்களும், சொற் சேர்க்கைகளும் அவற்றுள் உள்ளன. படிக்காதவனுக்குப் புரியாத யாப்பிலக்கண மரபுகள் காணப்படுகின்றன. ஆனால் இப்பாடலோ படிக்காத உழைக்கும் மக்களுக்குப்பாடினாலும், நடித்துக் காட்டினாலும், விளங்கும்படி மக்களால் பேசப்படும் சொற்களைக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.

தனி மனிதன் எழுதிய காரணத்தால், இடையிடையே பாத்திரப் பேச்சாகவும், கவிக்கூற்றாகவும், விருத்தங்கள் பயின்று வந்துள்ளன.

பெரும்பான்மையாக பாத்திரங்களின் பேச்சு வாயிலாகவே கதை நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன.

இடையிடையே நிகழ்ச்சிகளைக்கூற உரைநடை பயன்படுத்தப்பட்டுள்ளது. இக் கதையைச் சுருக்கமாகக் கூறவும் பயன்படுத்தப் படுகிறது.

வெள்ளையன் இறந்தவுடன் கட்டபொம்மு பதிலாள் தேடப் புறப்படுகிறான். ஊமைத்துரையும் கூடச் செல்லுகிறான். இது முதற்கொண்டு இரண்டாவது சண்டை வரைக்குமுள்ள கதையை வசனம் சுருக்கிக் கூறுகிறது. இதற்கோர் உதாரணம்:

'இரண்டுபேரும் புறப்பட்டுச் செல்ல இச்சமாசாரம் சென்னைக்குப் பறந்தது. மகாராணியவர்களுக்குத் தெரிவிக்க, அப்படிப்பட்ட சுத்த வீரனைக் கொல்லாமல் சின்ன நவாபு பட்டம் கொடுக்கச் சொல்லி அக்கடிதம் கோவில்பட்டிக்கு வர, மற்றப் பாளையப்பட்டாரறிந்து வேறே கடிதம் எழுதித் தெரிவிக்க அக்கினிச் சென்னல் பட்டாளத்துடன் புறப்படல். இரண்டாவது சண்டை. அக்கினிச் சென்னல் கோலம்"

பெரும்பாலும் உரையாடலாகவே கும்மிப்பாட்டின் மூலம் கதை நடத்திச் செல்லப்படுகிறது.