பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழவராயன் என்னும் சிற்றரசனின் ஆளுகைக்குட்பட்டிருந்த திருக் காவலூரிலுள்ள கிறித்தவ மக்கள் மிகவும் பிறரால் துன்பமடைந்து, மதப்பற்று அற்றவர்களாயிருந்தார்கள். சமயப் பணியையே தம் பிறவிப் பயன் எனக் கருதிய முனிவர், திருக்காவலூர் மக்களின் அஞ்ஞானத்தைப் போக்கத் திருவுளங் கொண்டு, விரைந்து அவண் சென்றார்; அங்குள்ள மக்களுக்குச் சமய போதனைகளைத் தெளிய உரைத்தனர். அவருடைய இன்சொல் போதனைகளாலும், மலர்ந்த முகத்தின் பொலிவினாலும் பலர்கிறித்தவ மதத்தைத் தழுவலானார்கள். சிற்றரசன் மழவராயனும் முனிவரிடம் பேரன்புகொண்டது மன்றி, மேரியம்மையார்க்குத் திருக்கோயில் கட்டுதல் பொருட்டு, வேண்டிய நிலமும் ஈந்தனன். ஆண்டவனின் திருவருளை நினைத்து உவப்புற்ற மாமுனிவர், அந் நிலத்தில் அழகிய தேவாலயம் ஒன்றைக் கட்டி முடித்தார்; பின்பு மேரியம்மையாரின் அழகிய உருவத்தை அத் தேவாலயத்தில் பிரதிட்டை செய்து, அவ்வம்மையாருக்கு ‘அடைக்கல மாதா’ என்னும் திருநாமமும் சூட்டினார். முனிவருக்கு அடைக்கல மாதாவிடம் பூரண பக்தி இருந்தது. எனவே, அவர் மாதாவைப்பற்றி நெஞ்சுருகப் பல பாமாலைகளையும், கலம்பகங்களையும் இயற்றினார். முனிவரின் மனம் உருக்கும் சமயப் போதனைகளும், அடைக்கல மாதாவின் அன்புருவமும் மக்களைக் கிறித்தவச் சமயப் பற்றில் ஆர்வமுள்ளவர்களாக ஆக்கின.

கி. பி. 1713-ஆம் ஆண்டில் வீரமா முனிவர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள குருக்கல்பட்டி என்னும் கிராமத்திற்குச் சென்றார். இங்குள்ள மக்களில் சிலரே கிறித்தவ மதத்தைத் தழுவியவர்கள். அதுகண்ட முனிவர் மனம் புழுங்கினார்; நீர்வடித்தார். எனவே, ஒவ்வோர் இல்லத்திற்கும் அவர் சென்று,