பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

 தற்குப் பல காரணங்கள் இருபபினும், அவற்றுள் தலை சிறந்த காரணங்கள் சில அவை, தேவர் எம் முறையில் தாம் கூறப்புகுந்த நாட்டின் வளத்தையும் சிறப்பையும் கூறியுள்ளாரோ, அம் முறையைப் பிற நாடுகளும் பெறவேண்டும் என்பதும், அவர் எத்தகைய நாட்டை விழைகின்றார் என்பதும், அந்நிலை அமைவதற்கு யார் யார் எவ்வெம்முறையில் உழைக்க வேண்டும் என்பதும் ஆகும்.

நாடு என்றதும் சிலருக்கு மண்ணும் மரமும் மட்டைகளுமே முன்வந்து நிற்கும். இவைமட்டும் அல்ல நாட்டிற்குரிய பண்புகள். நாட்டின் இலக்கணம் காண விழைவார், வள்ளுவர் வகுத்த நாடு என்னும் தலைப்பின்கீழ் உள்ள குறட்பாக்களே ஊன்றிப்பார்ப்பார்களாக ! ஆனால், தேவரும் நாட்டைக் காண முயல்கின்றனர்; வகுக்க முன் வருகின்றார். அவர் கண்டது என்ன ? வகுத்தது யாது? இவையே ஈண்டு ஆராய்வதற்குரியவையாகும்.

நாட்டிற்கு இன்றியமையாதது செல்வம் என்பதை மறுக்க எவருக்கும் எண்ணம் எழாது. செல்வம் நிறைந்த நாடே செழிப்புற்ற நாடு. அச் செல்வம் எது? பொருட் செல்வம் மட்டுமா? அன்றிக் கல்விச் செல்வமும் வேண்டற்பாலதோ ? எனில் இரண்டுமே ஈண்டுச் செல்வம் என்று குறிக்கப்பட்டவையாகும். பொருட் செல்வத்திலும் கல்விச் செல்வமே தலை சிறந்தது, 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்பதன்றோ வள்ளுவர் கருத்து ? 'விழுச்செல்வம்' என்று கல்வியைத் தானே கவிஞர் பலரும் கழறுவர்? இதனால். பொருட்செல்வம் பொலிவுறுதல் வேண்டாவோ ? என்ற வினா எழ வேண்டா. இரண்டும் ஒரு நாட்டிற்குக் கண் போன்றவை. இதனை மறவாத நம் முனிவர் பெருந்தகையார், தாம் காணும் நாட்டைக் குறித்துக் கழறும்போது,