பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

நூற்களில் வரும் சூத்திரங்களுக்கே நகைச்சுவை பொருள் காட்டி நகைக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த தமிழ்ப்பெருமக்கள், இலக்கியங்களில் அச்சுவையை அவர்கள் புகுத்தாமல் இருப்பரோ?

“முன்னிலை முன்னர் ஈயு மேயும்

அந்நிலை மருங்கின் மெய்யூர்ந்து வருமே”

என்பது தொல்காப்பிய நாற்பா. இது முன்னிலைச் சொற்கள் ‘சென்றீ,’ ‘சென்மே’ என வருவதற்கு இலக்கணம் கூறும் முறையை அறிவிப்பதற்கு எழுந்ததாயினும், இதில் நகைச் சுவைப் பொருளையும் கண்டு ஏன் சுவைக்கக் கூடாது? ‘உண்ணும் இலைக்கு எதிரே எறும்பு முதலியன ஊர்ந்துவருதலே அன்றி, ஈயும் மேயும் ; அப்படி மேய்தலோடு நில்லாமல், உடலிலும் ஊர்ந்து செல்லவும் தொடங்கும்,’ என்று வேடிக்கைப் பொருள் கூறிச் சுவைக்கச் செய்யவும் கூடும். நகைச்சுவை தமிழ் நூல்களில் இல்லை எனக் கூற இயலுமா ?

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன்

றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் நகைச்சுவை ஆன்றோ முன்னர்க் கூறப்பட்டுள்ளது? இத் தருணம்,

“எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்

எழுத்தறிவார்க் காணின் இலையாம்”

என்னும் துறைமங்கலத்தார் தூயமொழிகொண்டு குறை கூறுவாரை அடக்கிவிடலாம். இனி நாம் திருக்கோவையாரில் காணப்படும் நகைச்சுவையை அறிந்து நனி வியப்படைவோமாக.

தலைவன் தோழியிடம் வந்து தலைவியின் கூட்டுறவைப் பெறுதற்கு அவளோடு பேசத் தொடங்கினான்.