பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரணரைப் போலவே அரசில் கிழார் என்னும் புலவர் பெருந்தகையாரும் பேகனும் கண்ணகியும் கூடி வாழப் பெரிதும் முயன்றனர். அரிசில் கிழார் கருத்தும் பரணர் கருத்தும் இந்த முறையில் ஒன்றாகவே காணப்பட்டன. அரிசில் கிழாரும் பேகன் மனையாள் கண்ணகியின் நிலையை அறிந்து கொண்டு நேரே பேகனிடம் சென்றனர். பேகனை ஏனைய புலவர்கள் புகழ்ந்து விளித்தது போன்று விளிக்காது, இவனது போர் வெற்றியை மட்டும் புகழ்ந்து விளித்தனர். "அடுபோர்ப் பேக" என்றனர். இங்ஙனம் இவர் விளித்ததன் நோக்கம், உன் வெற்றிகள் யாவும் இல்லக் கிழத்தியோடு இல்லறம் நடத்தாத போது பயனற்றனவேயாகும். "புகழ் புரிந்து இல்லிலோற்கு இல்லை, இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை" என்பது பொது மறை. " நின் இல்லக் கிழத்தி உடன் இல்லாதபோது உன் வெற்றிச் சிறப்பு வெற்றெனப்படுவதே" என்பதைச் சுட்டிக் காட்டவே இங்ஙனம் விளித்தனர். பிறகு இப்பேகனை நோக்கி, "யானும் நின்னால் தரப்படும் பெறுதற்கரிய அணைகலன்களும் செல்வமும் ஆகிய அவற்றைப் பெறுதலை விரும்பேன். யான் சிறிய யாழில் செவ்வழியாகிய பண்ணை அமைத்து நின் வலிய நிலமாகிய நல்ல மலை நாட்டைப் பாட, அது கேட்டு என்னை விரும்பி எற்குப் பரிசில் தர விரும்புவையாயின், அப்பரிசிலே யான் வேண்டேன். அருள் புரியாமையால் கண்டார் எல்லாம் இரங்கும் வண்ணம் மெலிந்து அரிய துயரால் நின் இல்லக் கிழத்தி இல்லின் கண் மழையைக் காணாது வாடிய பயிரினப் போல்வருந்தி நிற்கின்றாள். அவளிடம் சென்று அவளது அடர்ந்த குழலில் அழகிய மலரைச் சூட்டி மகிழும் பொருட்டு நின் தேரில் பரியினைப் பூட்டி விரைந்து செல்க. இதுவே யான் வேண்டும் பரிசில்" என்று இன்னுரை பகர்ந்தனர். "அருங்கல வெறுக்கை அவை பெறல் வேண்டா. பரியினை