பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டுவரை வாழ்ந்த அரசர்காலத்தவர். முன்பு சேக்கிழார் காலம் குறிப்பிட்டிருப்பதையும், ஈண்டுக் கம்பர் விளங்கிய காலத்தைக் குறிப்பிட்டிருப்பதையும் உற்று நோக்கில்லை கம்பர் பிற்பட்டவர் என்பது நன்குவிளங்கும். மேலும், "காவலன், மண்ணில் கடலில் மலையில் பெரிது என் என எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை" எனக் கம்பர் சேக்கிழாரின் அறிவைப் புகழ்ந்து பாடினார் எனக் கூறப்படும் திருக்கைவழக்கநூல் சான்றினாலும் கம்பர் சேக்கிழாருக்குப் பிற்பட்டவராதல் தெளிவாகும். இது நிற்க.

சேக்கிழார் பெருமானார் இறைவன் தமக்கு 'உலகெலாம்' என்று எடுத்துக்கொடுத்த தொடரையே மகுடமாக அமைத்து

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

எனப் பாடியருளினர். இங்ஙனமே கம்பரும் தமது நூலின் தொடக்கத்தில்,

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடை யார் அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

என்று பாடி அமைத்துக் கொண்டனர், இவ்வமைப்பில் ஒற்றுமைகள் பல உள, அவற்றுள் தலை சிறந்தது சேக்கிழார் எந்தக் கலிவிருத்தயாப்பில் செய்யுளைப் பாடினரோ அதிலேயே கம்பரும் பாடி அமைத்திருப்பதேயாகும்.

சேக்கிழார்பெருமானார் தம் நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் எனப்பெயர் சூட்டியதோடு நில்லாமல், மாக்கதை என்னும் திருநாமத்தையும்