பக்கம்:கட்டுரை வளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 கட்டுரை வளம்

என்ற பாடலைக் கேட்டுத் தன் எண்ணத்தில் தவறில்லை என முடிவு செய்தாள்; அப்பாட்டில் தன்னை விலக்கும் குறிப்பு இருப்பதாக எண்ணி வாடினாள். மேலும் அவன் கட்டிய மனைவி கண்ணகியை விட்டுத் தன்னை வந்து அடைந்தவனாதலின், தன்னையும் ஒருநாள் துறந்து விடுவானோ என்ற அச்சம் அவள் அடிமனத்தில் இருந்தி ருக்கலாம். எனவே, அவள் மன்னுமோர் குறிப்புண்டு, இவன் தன்னிலை மயங்கினானென நினைத்துத் தானு மோர் குறிப்பினள் போலக் கானல் வரி பாடத் தொடங் கினாள்.

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி காவேரி ! கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்த வெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி !’

-சிலம்பு : கானல் வரி, 25

என்று மாதவி பாடுகிறாள். கோவலன் பெண்ணின் பெருந் தக்கதாகிய கற்பைப் பாராட்டிப் பேச, அக்கற்பு வளையாமை மன்னன் செங்கோல் வளையாமையின் திறத் தால்தான் என்று மாதவி பாடுகிறாள். கோவலன் பாட்டை விட மாதவியின் பாடல் உருக்கம் நிறைந்ததாய் இருக்கிறது. மேலும், கோவலன் தன் பாட்டில் எடுத்தாண்ட சொற்களையே வைத்துப்பாடுகிறாள். கையுறை மறுப்பது போலப் பாடல் பாடிப் பின்னர்ப் பிறனொரு தலைவன்மேல் காதல் கொண்டிருப்பதாகத் தோன்றப் பாடுகிறாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/90&oldid=1376086" இலிருந்து மீள்விக்கப்பட்டது