பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்போதுமே நாட்டமிகுந்த தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு மு. தமிழ்க்குடிமகனார் அவர்கள் சிறப்புமிகு வாழ்த்துரை வழங்கியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக. என் மீதும் என் பணி மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பவர் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. கலாநிதி அவர்கள். அவர்கள் நான் பணியாற்றும் தென்மொழிகள் புத்தக நிறுவனத்தின் தலைவருமாவார். பல்வேறு பணி நெருக் கடிகளுக்கு இடையேயும் சிறப்பானதொரு கருத்துரையை வழங்கிச் சிறப்பித்த அவர்கட்கு என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் முயற்சிகளை அவ்வப்போது ஊக்குவிக்கும் அறிஞர் பெருந்தகைகளான டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களும் டாக்டர் மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்களும் டாக்டர் இரா. மா. வாசகம் அவர்களும் இந்நூலுக்கு சிறப்பான பாராட்டுரைகளை வழங்கிச் சிறப்பித் துள்ளனர். அவர்கட்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு அரசின் நல்கைபெற்று இந்நூல் வெளிவரப் பேரார்வம் காட்டிய தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்கட்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூற்பணி முடியும் வரை எனக்கு எல்லா வகை உதவி, ஒத்துழைப்பு நல்கி, சோர்வடையும் போதெல்லாம் தெம்பூட்டி உற்சாகப் படுத்திய என் துணைவியார் சித்தை செளதா அவர்கட்கு நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்நூல் அச்சுப் பதிவம் தயாரிப்பில், சுரக்க்ஷா கம்ப்யூட்டர் நிறுவனர் திரு கி. நரசிம்மன் அவர்கள் காட்டிய ஆர்வமும் ஒத்துழைப்பும் பாராட்டத் தக்கதாகும். இந்நூலை அழகான முறையில் அச்சிட்ட கிரியேட்டிவ் ஆஃப்செட் அச்சகத்தார்க்கு என் நன்றி உரித்தாகும்.

ஆயிரம் ஆண்டுகட்கு ஒருமுறை பூக்கும் தமிழ்ப் பொற்காலத்தின் தலைவாயிலில் நிற்கும் தமிழினத்தை தமிழகத்தை அறிவாற்றலோடு வழி நடத்தும் வரலாற்று நாயகர், தமிழ்ப் பொற்காலச் சிற்பி டாக்டர் கலைஞர், கணினிக்கு அளித்து வரும் பேராதரவும், ஆரம்பப் பள்ளி முதல் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் அரசின் முனைப்புத் திட்டமும் எல்லா வகையிலும் தமிழ் வளர்ச்சிக்கு மாபெரும் வேக முடுக்கியாக அமைந்து வருவது கண்கூடு. இத்தகு இனிய சூழலில் வெளிவரும் இந்நூலை, எனது முந்தைய நூல்களை ஏற்று, ஆதரித்து ஊக்குவித்த தமிழுலகம், இம்முயற்சியையும் ஏற்று ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.

சென்னை - 40

அன்பன்

25 - 11 - 1999

மணவை முஸ்தபா

8