பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகவுரை

இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் விந்தைகளில் தலையாயதாக மலர்ந்திருப்பது கணினியாகும். பரந்து விரிந்த உலகைக் கையடக்க உலகமாக மாற்றியமைத்த பெருமை கணினியையே சாரும். உலகிலுள்ள அனைத்து அறிவியல் துறைகளும் கணினியைச் சார்ந்து வளரவேண்டிய இன்றியமையாச் சூழ்நிலை; ஒருவகைக் காலக் கட்டாயம் கூட.

இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும்போது கணினியின் அரவணைப்போடு பெருமிதமாக நுழையும் இனிய வாய்ப்பை தமிழ்நாடு அரசும், ஆய்வுலகமும் உருவாக்கிக் கொண்டுள்ளது. கணினி பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வியக்கத்தக்க அளவில் உருவாகி வருகிறது. அதற்குத் தமிழ்நாடு அரசும் கல்வித் துறையும் பெரும் காரணங்களாக அமைந்து வருகின்றனவெனலாம். இத்துறை வளர்ச்சியில் முதல்வர் டாக்டர் -கலைஞர் அவர்கள் காட்டிவரும் ஆர்வம் போற்றத்தக்கதாகும்.

கணினிக் கல்வி வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கை அளித்துவரும் அண்ணாப் பல்கலைக் கழகம், கணினித் தமிழ் வளர்ச்சியிலும் தன் பங்களிப்பை வழங்கத் தவறவில்லை. தமிழ்ப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து 1994ஆம் ஆண்டில் 'தமிழும் கணிப்பொறியும்' என்ற கருத்தரங்கை இரு நாட்கள் நடத்தியது. எதிர்காலத்தில் கணினி பற்றிய நூல்கள் தமிழில் எழுதுவதற்கு ஏதுவாக தமிழில் கணினிக் கலைச் சொல் அகராதி ஒன்றைத் தயாரிக்க குழுவொன்றை 1999ஆம் ஆண்டில் அமைத்தது. அக்குழுவின் தயாரிப்பு 'கணிப்பொறிக் கலைச் சொல் அகராதி' என்ற பெயரில் டிசம்பர் 1998 இல் சிறு நூலாக வெளி வந்தது. இஃது கணினி ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நேர்த் தமிழ்க் கலைச் சொல்லைத் தருவதாகும்.

ஆனால் ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நேர் தமிழ்க் கலைச் சொல்லும் சொல் விளக்கமும் பொருள் விளக்கமும் தரவல்ல முழுமையான கணினி அகராதி தமிழில் இல்லையே என்ற ஏக்கத்தை அறவே போக்கும் வகையில் வளர் தமிழ்ச் செல்வர் திரு மணவை முஸ்தபா அவர்கள் கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி' என்ற பெயரில் மிகப் பெரும் நூலை வெளியிட்டுள்ளார். இஃது தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே விரிவான தகவல் விளக்கங்களோடு வெளிவந்துள்ள, பெரும் அளவிலான அகராதி நூல் இது

15