பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றே என்பது நமக்கெல்லாம் பெருமையும் பெருமிதமும் தரும் செய்தியாகும்.

இந்நூல் அகராதிப் போக்கையும் கலைக் களஞ்சிய அமைப்பையும் ஒருசேரக் கொண்டுள்ள 'களஞ்சிய அகராதி' எனும் புது வடிவைப் பெற்ற புதுவகைப் படைப்பாகும். எடுத்துக்காட்டுகளும் படங்களும் பட விளக்கங்களும் நூலுக்கு மேலும் வலுவையும் வனப்பையும் ஊட்டுவனவாயுள்ளன.

இதே முறையில் இதற்கு முன் நான்கு கலைச் சொல் களஞ்சிய அகராதிகளைத் தமிழுலகிற்கு தந்து, அறிவியல் தமிழ்ப் பணியில் தனி முத்திரை பதித்துள்ள அறிவியல் தமிழறிஞர் திரு மணவை முஸ்தபா, இப்போது வெளியிட்டுள்ள “கணினிக் கலைச் சொல் களஞ்சிய அகராதி” மூலம் ஒருவகையில் தனி வரலாறு படைத்துள்ளார் என்றே கூற வேண்டும். இந்நூல் தயாரிப்புக்காக அவர் செலவிட்டுள்ள ஏழாண்டு காலக் கடும் உழைப்பு காலப் போக்குக்கேற்ப உருவாகும் எத்தகைய அறிவியல் வளர்ச்சித் தேவைகளையும் நிறைவு செய்யவல்ல ஆற்றல் மிகு அறிவியல் மொழியே தமிழ்' என்பதை எல்லாவகையிலும் மெய்ப்பித்து வருவதை நன்றியுணர்வோடு தமிழுலகம் கண்டு மகிழ்கிறது.

எவ்வளவு திட்ப, நுட்பமுடைய அறிவியல் செய்தியாயினும் அதனைப் பழகு தமிழில் இலக்கிய நயத்தோடு சொல்லவியலும் என்பதை இந்நூல் நெடுகிலும் காண முடிகிறது. சொற் செட்டும், பொருட்செறிவுமிக்க இனிய, எளிய நடை இப்புத்துலக அறிவியல் துறையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள பெருந்துணை புரிகிறதெனலாம்.

தமிழில் கணினி பற்றிய நூல் எழுத முனைவோருக்கும் தமிழில் கணினி கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் தமிழ் வழி கணினி கற்க முயலும் தமிழார்வலர்களுக்கும் இந்நூல் அருங் கொடையாயமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நூலாசிரியரின் அருந்தமிழ் அறிவியல் பணியை தமிழுலகோடு சேர்ந்து நானும் பாராட்டி மகிழ்கிறேன்.

சென்னை - 25

டாக்டர் அ. கலாநிதி

20 - 10 . 1999

துணைவேந்தர்
அண்ணா பல்கலைக் கழகம்



16