பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாட்டில் இவ்வாறு உருவாக்கப்பட்ட முதுகெலும்புப் பிணையங்கள் (Back Bone Network) ஒருங்கிணைக்கப்பட்டு இணையம் (Internet) உருவானது. உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறெந்த மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியத்தை ஒரு நொடியில் பெற வழியேற்பட்டது.

கணினியின் பயன்பாடுகள்

கடையில் வாங்கும் பொருளுக்கு பில் போடுவது தொடங்கி செவ்வாய்க் கிரகத்தில் ஆளில்லாத வாகனத்தை பூமியிலிருந்தே இயக்குவதுவரை கணினியின் பயன்பாடுகள் விரிவடைந்துள்ளன:

நூலகங்களில் புத்தகப் பரிமாற்றம், வங்கிகளில் வரை வோலை, காசோலை வழங்கல், பேருந்து, ரயில், விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்தல் -இன்னும் இதுபோன்ற பணிகள் கணினி மூலம் நிறைவேற்றப் படுகின்றன.

ஓர் அலுவலகத்தின் ஆவணத் தயாரிப்புக்கு மட்டுமின்றி, நிதிநிர்வாகம், தகவல் பரிமாற்றம் போன்ற அனைத்துப் பணிகளுக்கும் கணினி பயன்படுகிறது.

பெரிய தொழிலகங்களில் மூலப் பொருள் கொள்முதல் தொடங்கி, பொருள் வடிவமைப்பு, உற்பத்தி, கையிருப்பு, விற்பனை, விற்று வரவு, வாடிக்கையாளர் சேவை - போன்ற அனைத்து வணிக நடவடிக்கைகளும் கணினி மூலமே நடைபெறுகின்றன.

ஒரு புத்தக வெளியீட்டுக்கான அனைத்துப் பணிகளையும், மேசைமேல் உள்ள ஒரு கணினி (Desk Top Publishing) மூலம் செய்து முடித்து விட முடிகிறது.

மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் பணிகளில் பல்லூடகக் கணினிகளில் (Multimedia Computers) பங்கு கணிசமானது.

வங்கியில் நாமாகப் பணம் எடுத்துக் கொள்ள முடியும். சாலைகளில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, பெரிய ஆலைகளில் எந்திரங்களைக் கண்காணிக்க, நாடு முழுவதிலுமுள்ள தொலைபேசித் தொடர்பகங்களை இயக்க, வானிலையை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை செய்ய - கணினிகளே உதவுகின்றன.