பக்கம்:கண்ணகி தேவி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கண்ணகி தேவி

கண்ணகியின் அழகைக் கண்டு வியந்த ஆயர் ஆய்ச்சிகள் சூழ மதில் வாயிலைக் கடந்து தன் மனைபுக்காள்; தன் இல்லத்தின் அருகில் புதிதாய்க் கட்டியதும் செம்மண் பூசிப் பந்தரோடு விளங்கியதுமான ஒரு சிறு வீட்டில் கோவலன் கண்ணகி இருவரையும் இருக்கச் செய்தாள்; பின்னர்க் கண்ணகியை நீராட்டி, அலங்கரித்துத் தன்மகள் ஐயை என்பானைத் தொழிலாட்டியாகக் கொடுத்து, “கண்ணகி, ஒன்றற்கும் நீ கவல வேண்டா; இனி இவ்விடத்தில் உன் கணவர்க்குத் துன்பமுறுதலும் உண்டோ ?” என்று இனிய மொழி பகர்ந்து, கண்ணகியைத் தேற்றினாள். அப்பால் மாதரியின் கட்டளைப்படி ஆய்ச்சிகள், உணவு சமைத்ததற்குப் புது மட்கலங்களோடு பலாக்காய், வெள்ளரிக்காய், கொம்மட்டி, மாதுளங்காய், வாழைக்கனி, மாங்கனி, அவரை, துவரை, செந்நெல்லரிசி, பால், தயிர், நெய் முதலிய தூய உணவுப்பொருள்களைக் கண்ணகியிடம் கொண்டுவந்து கொடுத்தனர். ஐயை அடுப்பில் வைக்கோலால் தீ மூட்டினாள். கண்ணகி ஐயையுடன் உணவுப்பொருள்களை உண்ணுதற்கினியவாய்ப் பாகம் பெறச் சமைத்தாள். பின்பு கண்ணகி, கோவலனது அடிகளை நீரால் விளக்கி, அமுது செய்யவேண்டினாள், கோவலன் பனங்குருத்தோலையாற்செய்த தடுக்கில் உண்பதற்கு உட்கார்ந்தான். தேவி, தரையில் தண்ணீர் தெளித்து, ஈனா வாழைக்குருத்தை விரித்து இட்டு, அதில் வகை வகையாய் உணவுகளை வட்டித்தாள். அவன் அறுசுவை உண்டியை விரும்பி இனிதாக உண்டான். பக்கத்தில் நின்ற ஐயையும், மாதரியும், “இந்த மதுரையில் இவ்வாயர்பாடியில் யாம் பெற்ற இந்நல்லமுதம் உண்கின்ற இந்த நம்பி, அந்த மதுரையில் அவ்வாயர்பாடியில் அசோதை பெற்ற அந்த நல்லமுதம் உண்ட பூவை வண்ணனாகிய கண்ணனோதான் ! இவன் துயர் தீர்த்த இந்த நங்கை, காளிந்தி ஆற்றின் கண் மணிவண்ணனைத்துயர் தீர்த்த