பக்கம்:கண்ணகி தேவி.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கண்ணகி தேவி

அணிதற்கும் ஏற்றதன்று ; இதனை அரசனுக்கு அறிவித்து வருமளவும் நீர் என் குடிசைக்கருகிலுள்ள அவ்விடத்தில் அமர்ந்திரும்," என்று வேண்டினன். கோவலனும் அங்ஙனமே அக்கசாலைப் பள்ளியின் மதிலினுள்ளே புகுந்திருந்தான். பொற்கொல்லன், "நான் முன்பு வஞ்சித்துக்கொண்ட அரசியின் சிலம்பு என்னிடத்தே உள்ளது என்று பலரும் அறிய அரசனுக்கு வெளிப்படு முன்னமே, அச்சிலம்போடொத்த இச் சிலம்பைக்கொண்டு வந்த அயலூரான்மீது இடுவந்தியிட்டு (பொய்ப்பழி ஏற்றி), என்மீது உண்டாகும் ஐயத்தை நீக்கிக்கொள்வேன்!” என்று துணிந்து, அரண்மனை நோக்கிச் சென்றான்.

அச்சமயத்தில் பாண்டியன், தன் மனைவி கொண்டுள்ள ஊடலை நீக்கும்பொருட்டு, மந்திரிகளை நீங்கித் தனியாக மனைவியிருக்கும் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். பொற்கொல்லன் அச்சமயத்தில் அரசனைக் கண்டு வணங்கி, "அரசர் பிரானே, கன்னக்கோலும் கவைக்கோலும் இல்லாமலே நித்திரை மந்திரத்தால் காவலாளரை மயக்கி, அரண்மனையிலிருந்த சிலம்பைக் கவர்ந்துகொண்ட கள்வன், இப்போது அதனை விற்பதற்கு ஊர்காவலர் கண்ணைக் கட்டி, மறைந்து வந்து, அடியேனுடைய சிறுகுடிலகத்துத் தங்கியிருக்கின்றான்; அதனை விண்ணப்பிக்கவே இங்கு வந்தேன்," என்றான். அரசியின் ஊடலால் அறிவு மயக்கமுற்றிருக்தி பாண்டியன், காவலாளரை அழைத்து. அரசியின் சிலப்பு இவன் சொன்ன கள்வன் கையிலிருப்பின், அவனைக் கொல்ல, சிலம்போடு இங்குக் கொண்டு வருக!” என்று சொல்லக் கருதியவன், வினை விளைவு பலிக்குங் காலம் கிட்டியமையால் அது மறந்து ஆராயாது, "அவனைக்கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக!” என்று கட்டளையிட்டுச் சென்றான்.