கண்ணகி தேவி
45
என் கணவரைப் பண்டுபோலக் காண்பேனோ! காண்பேனாயின் அஃது ஒருபுதுமையே; அவ்விதம் கண்டால் அவர் வாக்காற்சொல்லும் நல்லுரையைக் கேட்பேனோ? கேட்பேனாகில் அஃது எனக்கோர் உறுதி, அங்ஙனம் அவருரைக்கும் உரையைக் கேளேனாயின், 'இவள் கள்வன் மனைவி,' என்று என்னை நீங்கள் யாவரும் இகழுங்கள்,' என்று ஆற்றாது புலம்பிச் சூளுரைத்தாள்.
இங்ஙனம் அழுகின்ற அவளை, மதுரை நகரத்தார் யாவருங்கண்டு, தேற்றும் வழி காணாது, தாமும் இரங்கி அழுது மயங்கி, "இனி இறக்குமளவும் நீங்காத துன்பத்தை இக்காரிகைக்கு உண்டாக்கியதனாலே, ஒருகாலும் கோடாத செங்கோல் கோடியது; இதனால்மேல் யாதுவிளையுமோ! பாண்டியனது அரசியல் அழிந்தது; இதனால் இனி யாதாகுமோ! செம்பொற்சிலம்பொன்றைக் கையிலேந்தி நம்மைக்கெடுத்தற்பொருட்டுப் புதுமையான பெருந்தெய்வம் இங்கு வந்தது; இதனால் இனி யாது நேருமோ! இவள் மிக விம்மி விம்மி வாய்விட்டு அரற்றுகின்றாள் ; தெய்வம் ஏறினாள் போலும் தன்மையுடையவளாயிருக்கின்றாள்; இதனால் இனி யாது விளையுமோ!" என்று பல படியாகக் கூறி, கண்ணகியின் நிலைமைக்கு வருந்தினர்.
வேறு சிலர், கண்ணகியை அழைத்துச் சென்று வெட்டுண்டு பட்ட கோவலனைக் காட்டினர். அப்பொழுது மாலைப்பொழுது வந்தது. ஊரெல்லாம் ஒல்லென்னும் பூசல் உண்டாயது. காலையில் தன்னைத் தழுவித் தன் மாலையைக்கொடுத்து வந்த கணவன், மாலையில் இரத்த வெள்ளத்தில் தன்னைப்பாராது பிணமாய்க் கிடக்கின்ற கடுந்துயரைக் கண்ட கண்ணகி,