பக்கம்:கண்ணகி தேவி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

47

அப்போது பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி இளங்கோப்பெண்டு, தன் கணவானாகிய பாண்டியனது செங்கோலும் வெண்கொற்றக்குடையும் நிலத்தில் விழவும், ஆராய்ச்சிமணிக்குரல் அதிரவும், இரவில் வானவில் உண்டாகவும், பகலில் நக்ஷத்திரங்கள் உதிரவும், பூமி நடுங்கவும், கனவில் கண்டு, அவை தீக்கனாக்களென்று அஞ்சி, தோழியோடு அரசனிடம் வந்து, அக்கனாத்திறங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள், அச்சமயத்தில் கண்ணகி கோபம் தணியாதவளாய் அரண்மனை வாயிலை அடைந்து, வாயில் காப்பவனை நோக்கி, "கணவனையிழந்தாள் ஒருத்தி கையிற்சிலம்பொன்றை ஏந்தி வந்து வாயிலில் காத்திருக்கின்றாளென்று உங்கள் அரசனிடம் அறிவி," என்றனள். அவன் அங்ஙனமே சென்று, “அரசர் பெரும, வாயிலில் ஒருத்தி வந்திருக்கின்றாள். அவள் கொற்றவையோ, பத்திரகாளியோ, சடாரியோ என்று சொல்லத் தக்க கோபமுடையவளாய்க் காணப்படுகின்றாள். கணவனை இழந்தவளாம். கையில் சிலம்பொன்று பிடித்திருக்கின்றாள்" என்று தெரிவித்தான். அரசன் "அவளை அனுப்புக" என்றான். அவனும் அங்ஙனமே கண்ணகியை அரசனிடம் செல்லவிட, அவள் சென்று அரசன் முன்னிலையில் நின்றாள்.

அரசன் கண்ணகியைக் கண்ணுற்று, "அம்மா, நீ ஏன் கண்ணீர் சொரிகின்றாய்? நீ யார்? என்றான், அதற்குக் கண்ணகி, தேரா மன்ன, நான், ஒரு புறாவின் பொருட்டுத் தன் தசையை அரிந்து தராசில் வைத்த மன்னர் பிரானும், தன் மகனால் அறியாது கொல்லப்பட்ட ஒரு பசுக்கன்றின் காரணமாக அருமந்த குலத்துக்கு ஒரு மைந்தன் என்பதையும் பாராமல் தன் மைந்தன் மீது தேரைச்செலுத்திய மனுச்சோழனும் இருந்து அரசாண்ட புகார்நகரில் வாழ்வேன்; அந்நக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/55&oldid=1412112" இலிருந்து மீள்விக்கப்பட்டது