பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇101



காசி தகனம்

கண்ணனுக்குப் போட்டியாக ஒருமன்னன் தன்னை "வாசுதேவன்" என்று சொல்லித் திரிந்துகொண்டிருந்தான். அவன் பவுண்டரக தேசத்து அரசன்; அதனால் அவன் 'பவுண்டரக வாசுதேவன்' என்று அழைக்கப்பட்டான். அவன் பெயருக்கு ஏற்ப அவன் உருவமும் கண்ணனை ஒத்திருந்தது. அதனால், அவன் நண்பர்கள்' "நீதான் கண்ணனாகிய வாசுதேவன். மற்றவர்கள் எல்லாரும் போலிகள்" என்று பேசி அவனைத் துண்டிவிட்டன்ர். அவனும் அப் புகழ்ச்சிக்கு மயங்கி நிமிர்ந்து நடக்கத் தொடங்கினான்; கண்ணனைப் போலவே சங்கு, சக்கரம், மணிமுடி முதலியவை அணிந்துகொண்டு தன்னைக் கண்ணன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தான்.

தன் தூதுவன் ஒருவனை அழைத்து "நீ அங்குப் போய் ஆயர் மகனிடம் சொல்; நீ அல்ல வாசுதேவன்; அங்கே வாசுதேவன் இருக்கிறான்; உன் சங்கு சக்கரத்தை நீக்கி விடு; அதை அவனிடம் ஒப்புவித்துவிடு என்று சொல்" என்றான். தன்னோடு போர்செய்து வென்றபின் அவற்றைத் தரித்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினான்.

கண்ணன், அந்த அறைகூவலைக் கேட்டு அவனைக் கணத்தில் சந்தித்தான்; "சக்கரம் தானே உனக்கு வேண்டும்: ஏற்றுக் கொள்" என்று சொல்லி அதனை ஏவினான். அதனைக் கையால் தடுக்கச் சென்றவன் தடுக்கத் தெரியாமல் விட்டுவிட்டான்; கழுத்துக்கு நேரே வந்தமையால் அவன் சிரத்தைத் துண்டித்துவிட்டது. அவன் வீண் ஆணவத்தாலும் தற்பெருமையாலும் அழிந்தான்.