பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 ◇ ராசீ


இருப்பது தெரிந்து, அங்குச் சென்று யமனை இறந்தவனைப் பழைய வடிவில் தரும்படி கேட்க, அவனும் அவன் உடலையும், உயிரையும் இணைத்து உயிர் தந்து உருவாக்கிக் கண்ணனிடம் ஒப்புவித்தான். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் காணாமற்போன அவனை மீட்டுத் தந்து தன் குருவிடம் சேர்ப்பித்தான்.

அந்த அசுரனாகிய சங்கினைத் தான் ஏற்றுக் கொண்டு அதைத் தான் முழங்கு கருவியாகப் பயன்படுத்தினான். அதற்குப் ‘பாஞ்சசன்யம்’ என்னும் பெயர் வழங்கியது. அதை முழங்கினால் எதிரிகள் நடுநடுங்கி ஓடுவர். அத்தகைய முழக்கம் அவன் கைக்கு வந்து சேர்ந்தது.

துவாரகை சேர்தல்

மகத தேசத்து அரசனாகிய சராசந்தன் கம்சனின் நெருங்கிய நண்பன். அவனைக் கொன்ற கண்ணனைப் பழிவாங்குவது என்று படை திரட்டி வந்தான். உக்கிர சேனனிடம் அவனை எதிர்க்கத் தக்க சேனைகள் இல்லாமல் போய்விட்டன. கண்ணனுடன் வந்த யாதவ வீரர்களும் மிகச் சிலரே. அந்தப் படைகளின் தாக்குதலுக்குக் கண்ணன் வசம் இருக்கும் படைகள் முன் நிற்க இயலவில்லை. கண்ணனும் பலராமனுமாக இருவருமே நின்று எதிர்க்க வேண்டி இருந்தது. தன் தெய்வசத்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆகாசத்திலிருந்து கண்ணனின் திருக்கரங்களுக்குச் சாரங்கம் என்னும் வில்லும், அக்ஷய துணீரமாகிய அம்பறாத்துணியும், கவுமோதகி என்கிற கதாயுதமும் வந்து சேர்ந்தன. அவ்வாறே பலராமனுக்கும் கலப்பையும் உலக்கையும் வந்து சேர்ந்தன.