பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ◇ ராசீ


அதே சமயத்தில் யவன தேசத்து அரசனான ஒருவன், தனக்கு மகன் இல்லையே என்று வருந்தியவனாய் இவரைத் தன் தேசத்துக்கு அழைத்து வந்து, தன் மனைவியோடு அவரைக் கூடியிருக்கும்படி செய்து ஒருமகனைப் பெற்றுக் கொண்டான். பிறந்தவன் வண்டு போன்ற நிறத்தினை உடையவனாய் இருந்தான்; மலை போன்ற தோள்களும், அகன்ற மார்பும், திண்ணிய உடலும், நெஞ்சு உரமும் பெற்றுப் பகைவர் அஞ்சும் தோற்றத்தைக் கொண்டி ருந்தான். அவனுக்குக் காலயவனன் என்று பெயர் வழங்கினர். அந்நாட்டு அரசன் முதியவன். தவம் செய்யக் காட்டுக்குச் சென்றுவிட்டான். மகன் தக்க வயது வந்ததும் பட்டம் சூட்டிக்கொண்டு பாரினை ஆளத் தொடங்கி னான். தினவு மிக்க அவன் தோள்களுக்கு மோதும் பகைவர்கள் தேவைப்பட்டனர். அற்ப வலிவு கொண்டவர்களோடு சொற்பமான சிறிய போர் விளைவிக்க அவன் விரும்பவில்லை. கண்ணன் சராசந்தனைப் பதினேழு முறை முறியடித்தான் என்று கேள்விப்பட்டதும் இவனே மகாவீரன்; இவனைத் தாக்குவதே தன் வீரத்திற்கு அழகு என்று மதுராவைத் தெற்கில் இருந்து வந்து தாக்க முற்பட்டான்.

இத்தகையவர்களோடுஎல்லாம் மோதிக் கொண்டு தேவையில்லாமல் போர்கள் செய்து, கண்ணன் அலுத்து விட்டான். மதுரா நகரம் தக்க மதில்களும், அகழிகளும் பெறாமல் அரண்கள் இல்லாமல் இருந்தன. நாடு என்றால் அதற்குத் தக்க அரண் இருக்கவேண்டும் என்ற தேவையை உணர்ந்தான். அதற்குத் தக்க இடத்தைத் தானே தேடிக் கொண்டான். கடலை அடுத்துக் கடல் வேந்தனிடம் இடம் கேட்டுப் பன்னிரண்டு யோசனை சதுர மைல்கள் கொண்ட பகுதியினை வளைத்துக் கொண்டான். அதன் மூன்று பகுதியும் கடலால் சூழப்பட்டிருந்தன. ஒரு பக்கம் மட்டும் கற்களும், மலைகளும் பொருந்திய நிலப்பரப்பு இருந்தது.