பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇61



கடல்நீர் உள்ளே புகாதபடி தக்க மதில்கள் எழுப்பி அந்நகரத்தைப் பாதுகாப்பு மிக்கதாய் ஆக்கிக் கொண்டான்; நிலப்பகுதி நோக்கிய இடத்தில் கோட்டைகளும், மதில்களும், தக்க வாயில்களும் அமைத்தான். மதுரா நகரத்துக் குடிமக்களையும், தம் பெற்றோர் களையும், உக்கிரசேன மகாராசனையும், மற்றும் உள்ள படைகளையும் துவாரகையில் கொண்டு சேர்த்துவிட்டு, மதுரா நகருக்கு மறுபடியும் ஒருமுறை சென்று மற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் சென்றான். கண்ணன் வந்திருப்பதை அறிந்து காலயவனன் கடுக அவனைப் பின் தொடர்ந்தான். கண்ணன் அவனுக்கு அகப்படாமல் ஒடி ஒரு மலைக்குகைக்குள் ஒளிவது போலப் புகுந்து கொண்டான். இருட்டில் கண்ணன் இருப்பதை அவனால் அறிய முடியவில்லை. அங்கே முசுகுந்தன் என்ற இளைஞன் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன்தான் கண்ணன் என்று நினைத்து அவனை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்ப, அவன் சினந்து இவனைப் பார்த்தான். இவன் உடனே எரிந்து சாம்பலாகி விட்டான். இந்த முசுகுந்தன் என்பவன் தேவ,அசுரர் யுத்தத்தில் பலமுறை தேவர்களுக்கு உதவியாய் இருந்து உதவி செய்ததால், தேவர்கள் அவனைப் பாராட்டி, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டனர். "பிறவி நீங்கி மோட்சம் அடைய வேண்டும்" என்று கூறினான். "அதற்கு இறைவன்தான் வந்து உதவ வேண்டும்; எங்களால் இயலாது" என்று கூறினார்கள்.