பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇89



அடுத்தது கோசல மன்னன் மகள் சத்தியா. அவள் தந்தையின் பெயர் நக்னஜித் என்பது. ஏழு எருதுகளை அடக்கியவனுக்கே அவள் உரியவள் என்று அறிவித்து இருந்தான். கண்ணன் இவ்வேழு எருதுகளையும் அடக்கி அவளை மணந்து கொண்டான். அடுத்தது பத்திரி என்ற பெயரை உடைய சுசீலை என்பவள், இவள் கேகய நாட்டு அரசனின் மகள் ஆவாள். ஒழுக்கத்திற் சிறந்தவள் என்ற சிறப்பு இவளுக்கு உண்டு. அடுத்தது இலக்குமனை என்பவள். அவள் மத்ர தேசத்து அரசனின் மகள் ஆவாள்; அவள் சிரிப்பழகியாக இருந்தாள். அதனால், அவளுக்குச் சாருஹாசனி என்ற பெயரும் வழங்கியது. நப்பின்னை என்ற ஒருத்தியை அவன் எருதுகளை அடக்கி மணந்ததாகத் திருப்பாவை என்னும் பிரபந்த நூல் கூறுகிறது. அது யார் என்று தெரியச் சான்றுகள் கிடைக்கவில்லை. பாகவதம் இதைக் குறிப்பிடவே இல்லை. இறுதியில் நரகாசூரனை வென்றபோது அவன் சிறைப்படுத்தியிருந்த பதினாறாயிரத்து நூறு கன்னிகளும் இவனையே தன் கணவனாக வரித்துக் கொண்டனர். அவர்களுள் உரோகிணி என்பவள் கண்ணனின் நெருங்கிய விருப்பத்துக்குரியவளாக இருந்தாள். இவை கண்ணனுடைய திருமணக் காதல் விவகாரங்கள் என்று கூறலாம். மேலும் கோகுலத்தில் இராதை என்பவளைக் காதலித்து அவளோடு ஆடி மகிழ்ந்தான்; அவளை மணக்கவே இல்லை.