உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

19

கொண்டிருக்கும், 'கனவான்' ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒருவர் வணக்கம் கூறிவிட்டு உட்காருகிறார். அலட்சியமாகவே சிங்காரவேலர் பதில் வணக்கம் கூறிவிட்டுச் சுழல் நாற்காலியில் அமருகிறார்.]

வந்தவர்.: நம்ம தம்பி, வியாபாரத்தைக் கவனிக்கிறதில்லே போலிருக்குதுங்களே...

சிங்.: இல்லிங்க...அவனோட போக்கே ஒரு தனிவிதமா...

வந்த.: அதைத்தான் சொல்றேன்...பாட்டு, கூத்து, நாட்டியம், நாடகம் இப்படி...

[வேலையாள் வந்து நிற்கிறான் பணிவாக]

சிங்.: (கோபம் காட்டியபடி) ஆடிக் கெட்டுப் போகிறான் என் மகன்னு பேசும் விவரம் தெரியாததுங்க...

[வந்தவர் திகைப்படைகிறார்]

அவன் நல்ல காரியத்துக்காக, ஏழைப் பிள்ளைகளுக்காக விழா நடத்தறான்...நாமதான் பணமோ பணம்னு அலையறோம். அவன் அப்படி இல்லய்யா...ஊருக்கு உபகாரம் செய்யணும் என்கிற நோக்கம் இருக்குது..நல்லதுதானே அது...

[வந்தவர் தலையசைக்கிறார். 'மகனைச் சிறிது நேரத்திற்கு முன்பு கண்டித்தவர் இப்போது பாராட்டுகிறாரே! இது என்ன விந்தை' என்று எண்ணி ஆச்சரியப்படுகிறான் வேலையாள்.]

பணமா பெரிசு...கூடவேவா...கொண்டுகிட்டுப் போயிடப் போறோம், மூட்டை கட்டி? பத்துப் பேருக்கு உபகாரம் செய்து நல்ல பேர் எடுக்கணுமய்யா! ஏதோ நமக்கெல்லாம் அந்த நினைப்பும் இல்லே—நேரமும் இல்லே. மகனாவது ஊருக்கு உபகாரம் செய்கிறானேன்னு எனக்கு மகிழ்ச்சி.

வந்த.: அதுசரிங்க...ஆமாங்க...