பக்கம்:கண் திறக்குமா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கண் திறக்குமா?



இதைக் கேட்டதும் என் மனம் எப்படியிருந்திருக்கும்? பரபரப்புடன் எழுந்து நின்று, ‘சாந்தினி, இனி ஒரு நிமிஷங்கூட என்னால் இங்கே தாமதிக்க முடியாது!’’ என்றேன்.

‘ஆத்திரப்படாதீர்கள்! - அசம்பாவிதமாக இதுவரை ஒன்றும் நடந்துவிடவில்லையென்றும், அப்படி ஏதாவது நடப்பதற்குள், தான் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவது நல்லதென்றும் அவளே எழுதியிருக்கிறாள். மேலும், அவர்களோ, உங்களுக்கு உறவினர்களாயிருக் கிறார்கள். அவசரப்பட்டு நீங்கள் அவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது - இந்த விஷயத்தில் சித்ரா சொல்வதுதான் சரி; அவள் சொற்படி நீங்கள் உடனே சென்று அவளை இங்கே அழைத்து வந்துவிடுங்கள். அதற்குள் உங்கள் வீட்டைக் காலி செய்து வைக்கும்படி அங்கே சென்றதும் என் அப்பாவுக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதி விடுங்கள் - நடந்ததைப் பற்றிச் சிந்திப்பதைவிட இனி நடக்கப்போவதைப் பற்றிச் சிந்திப்பதுதான் நல்லது!” என்றாள், அவளும் என்னோடு எழுந்து நின்றுகொண்டே.

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை - அப்போது என் உள்ளத்தைப் பிரதிபலிப்பது போலிருந்த அலைகடலை வெறித்துப் பார்த்த வண்ணம் நான் பெருமூச்சு விட்டேன்.

‘இந்தாருங்கள்!” என்று சொல்லி, அவள் என் கைக்குள் எதையோ சுருட்டி வைத்தாள் - என்னவென்று பார்த்தேன்; ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்கள் என் கைக்குள் இருந்தன.

‘தீபாவளியின்போது எனக்குப் பிடித்த புடவையாகப் பார்த்து எடுத்துக்கொள்ளும்படி அப்பா இருநூறு ரூபாய் கொடுத்தார். அதில் சமயத்துக்கு உதவட்டும் என்று ஐம்பது ரூபாயை எடுத்து வைத்திருந்தேன் - அது இப்போது உதவிற்று!’ என்றாள் அவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/101&oldid=1379121" இலிருந்து மீள்விக்கப்பட்டது