பக்கம்:கண் திறக்குமா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

15

கடைப்பிடித்து வந்தவர் அவர். அதன் பயனாக நிலமும் நீரும், வீடும் வாசலும், நகையும் நட்டுமாக நாலைந்து லட்சத்துக்குக் குறையாமல் சேர்த்து வைத்துச் சோம்பேறித்தனத்திலுள்ள சுகத்தை அவர் எங்களுக்குக் காட்டிவிட்டுப் போயிருந்தார். அதைக் கொண்டுதான் என்னையும் என் தங்கையையும் எனது தாயார் யாதொரு சிரமமுமில்லாமல் இத்தனை நாட்களும் பாதுகாத்து வந்தார்கள். இப்போது அந்தச் சொத்தில் பெரும் பகுதி கரைந்து விட்டது. எஞ்சி இருந்தவை நாங்கள் வசித்து வந்த வீடும், என் தாயார், தங்கை இவர்கள் அணிந்திருந்த கொஞ்சநஞ்சம் நகைநட்டுக்களும்தான்.

இந்த நிலையில் பெற்றவர்களைக் காலாகாலத்தில் பீடிக்கும் கவலை என் தாயாரையும் பீடித்தது. அந்தக் கவலை, எனக்கும் தங்கை சித்ராவுக்கும் தான் கண்ணை மூடுவதற்குள் எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும் என்பதே!

இதற்காக எங்கள் வீட்டுக்கு வருவோர் போவோரிட மெல்லாம் என் தாயார் எங்களுடைய கல்யாண விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்துக் கொண்டே இருப்பார்கள். “எங்கேயாவது நல்ல பையனாயிருந்தால் சொல்லுங்களேன்?” என்பார்கள் ஒருவரிடம் - “எங்கேயாவது நல்ல பெண்ணாயிருந்தால் சொல்லுங்களேன்?” என்பார்கள் இன்னொருவரிடம். எல்லாம் பேசி முடிந்து, கடைசியாக அவர்களை வழியனுப்பும் போது, “ஏழையை மறந்துவிடாதீர்கள்; ஞாபகத்தில் வையுங்கள்;” என்பார்கள் உருக்கமுடன். அவர்களோ, “ஆகட்டும் அம்மா, மறக்கமாட்டோம்” என்று சொல்லிவிட்டுப் போய், வேண்டுமென்றே மறந்துவிடுவார்கள்!

யாரும் வராமலிருக்கும் போதாவது என் தாயார் எங்கள் கல்யாண விஷயத்தைப் பற்றிக் கொஞ்சமாவது மறந்திருப்பார்கள் என்கிறீர்களா? - அதுதான் கிடையாது -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/18&oldid=1379259" இலிருந்து மீள்விக்கப்பட்டது