பக்கம்:கண் திறக்குமா.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கண் திறக்குமா?

தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்துப் பார்த்தேன். சந்தேகமில்லை; சாட்சாத் அவரேதான்!

ஆஹா! பணத்தின் சக்தியைத்தான் என்னவென்பேன்? எவ்வளவு சீக்கிரத்தில் அது சிலரைத் தேச பக்தர்களாக மாற்றிவிடுகிறது! எவ்வளவு சீக்கிரத்தில் அது சிலரைத் தியாக சீலர்களாக, புண்ணிய புருஷர்களாகப் போற்ற வைத்து விடுகிறது!

அந்தப் பணத்துக்குப் பதிலாக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய எத்தனை தேசபக்தர்களை அது இருந்த இடம் தெரியாமல் மறைத்து விடுகிறது! ஊர் ஊராகத் தெருத் தெருவாக அலைய விடுகிறது!

தன்னலமற்ற அந்தத் தியாகிகளில் எத்தனை பேர் தலைவர்களின் புகழுரைக்கும் பொது மக்களின் பாராட்டுரைக்கும் இதுவரை பாத்திரமாகியிருக்கிறார்கள்?

திருப்பூர் குமரன் எங்கே; தீரன் பகத்சிங் எங்கே, எங்கே? வாஞ்சி எங்கே, வ.உ.சி. எங்கே, எங்கே?

இவ்வாறு எண்ணி நான் வியந்துகொண்டிருந்த போது, “சிக்கவில்லை, என் கையில் அவன் இன்னும் சிக்கவில்லை!” என்று கருவிக்கொண்டே வந்தான் பாலு.

அவனை நான் அனுதாபத்துடன் பார்த்தேன். அதற்குள், “சிக்கட்டும், அவன் மட்டும் என் கையில் சிக்கட்டும்!” என்று மறுபடியும் கருவிக்கொண்டே அவன் வெளியே சென்றான்.

அவனைத் தடுத்து நிறுத்தி, “எங்கே போகிறாய்?” என்றேன் நான்.

“அவனைத் தேடிக்கொண்டுதான் செல்வம், அவனைத் தேடிக்கொண்டுதான்!” என்றான் அவன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை; “அவன் எதற்கு இங்கே வரப் போகிறான்?” என்று குழம்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/181&oldid=1379180" இலிருந்து மீள்விக்கப்பட்டது