பக்கம்:கண் திறக்குமா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

23

நினைக்கக் கூடாது? தங்கச் சங்கிலி என்பதற்காகக் கைகளில் விலங்கு போட்டுக் கொள்ள நான் தயாராயில்லை; உங்கள் வேலையைப் பாருங்கள்!’ என்று படபடப்புடன் கூறிவிட்டு, மடமடவென்று கீழே இறங்கினேன்.

அதே சமயத்தில் அந்த ஊர்வலத்தை நோக்கி ஒரு போலீஸ் லாரி விரைந்து வந்து நின்றது. அதிலிருந்து அதிகாரி ஒருவர் கீழே இறங்கினார். அவரைப் பின் தொடர்ந்து இருபது முப்பது போலீஸ்காரர்கள் குண்டாந்தடிகள் சகிதம் இறங்கினர். கூட்டத்துக்கு முன்னால் கொடி தாங்கிய வண்ணம் தலைமை தாங்கிச் சென்ற இளைஞனை நெருங்கி, அந்தப் போலீஸ் அதிகாரி ஏதோ சொன்னார் - அவர் அந்த ஊர்வலத்தைக் கலைத்து விடும்படி அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் - அந்த இளைஞன் அதற்கு இசைந்ததாகத் தெரியவில்லை. உடனே தனக்குப் பின்னாலிருந்த போலிஸாரை நோக்கி, ‘உம்’ என்று உறுமினார் - அவ்வளவுதான்; ‘படார், படார்!’ என்ற சத்தம் என் காதைத் துளைத்தது.

அடுத்த நிமிஷம், அப்பப்பா! அந்தக் காட்சியை என்னால் சகிக்க முடியவில்லை; எங்கு நோக்கினும் இரத்தம், இரத்தம்! - ‘பெரிய மனிதன் தோரணை’யில் ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டுத் திறந்தேன் - அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துச் சென்ற இளைஞன் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான்; அவன் கையிலிருந்த மூவர்ணக்கொடி ஒரே சிவப்பு வர்ணக் கொடியாக மாறியிருந்தது!

ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த நிலையிலும் அவன் வாய் வழியாக வந்த ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்ற மெல்லிய ஒலி, அவனுடைய உயிரைப் போலவே அணுஅணுவாகத் தேய்ந்துகொண்டே சென்று மறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/26&oldid=1379268" இலிருந்து மீள்விக்கப்பட்டது