பக்கம்:கண் திறக்குமா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கண் திறக்குமா?

உள்ளே சென்று உட்கார்ந்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் யாரையோ தேடித்தேடியலைத்தன. இதைக் கவனித்த பரந்தாமனார் வேறு விதமாக நினைத்துக்கொண்டு, "என்ன செல்வம், உனக்கு எல்லாம் ஒரே ஆச்சரியமாகத் தோன்றுகிறதா?" என்று கேட்டார்.

"இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஏதோ என்னைப் போன்றவர்களின் அற்ப தியாகத்தினால் உங்களைப் போன்றவர்களின் மனமும் மாறியிருக்கிறதே. அதைப் பார்க்கப் பெருமையாய்த்தானிருக்கிறது!" என்றேன் நான்.

இவ்வாறு சொல்லி வாய் மூடுமுன் அவர் விழுந்து விழுந்து சிரிக்கலானார். எனக்கு ஒன்றும் புரியவில்லை . "என்ன, ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" என்று பரபரப்புடன் கேட்டேன்.

"ஒன்றுமில்லை; உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாயே, அதற்காகச் சிரித்தேன்!" என்றார் அவர்.

"என்ன. என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா?"

"ஆமாம். உன்னைப் போன்றவர்களின் அற்ப தியாகத்தினாலோ, அபார தியாகத்தினாலோ நாங்கள் மனம் மாறிவிடவில்லை என்பதை இங்கே நான் வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்!" என்றார் அவர், 'பிரசங்கப் பாணி'யில்.

"சரி, அந்தப் பெருமையை என்னைப் போன்றவர்களுக்கு அளிக்க உங்களுக்கு இஷ்டமில்லையென்றால் விட்டுவிடுங்கள்!"

"இஷ்டமில்லாமலென்ன? - ஆனால் உன்னைப் போன்றவர்களுடைய தியாகத்துக்கும் என்னைப்போன்றவர்களுடைய மாறுதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தால் தானே? - இது எங்களுடைய சொந்த விஷயம் சார், சொந்த விஷயம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/77&oldid=1379154" இலிருந்து மீள்விக்கப்பட்டது