பக்கம்:கண் திறக்குமா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

79

ஒரு வெள்ளிக்குடம் வாங்கிக் கொண்டு போய் அவருடைய பெண்ணுக்கு ஒதி இட்டுவிட்டு வந்தேன் - எப்படி எங்கள் திட்டம்?”

“பிரமாதம், போங்கள்!”

“அப்படிச் சொல்லய்யா, அப்படிச் சொல்லு! - அதற்குப் பிறகு நான் ‘திலகர் குருகுலம்’ ஆரம்பித்தபோது, தம் பத்திரிகையில் அதைப் பற்றிய செய்திகளை அவர் பிரமாதப்படுத்திப் பிரசுரித்தார். என்னுடைய படத்தை வேறு பெரிய அளவில் போட்டு, ‘இந்திரனாக்கும், சந்திரனாக்கும்!’ என்றெல்லாம் எழுதி ஜமாய்த்தார்! - நீங்களுந்தான் போலீஸ் குண்டாந்தடியை ருசி பார்த்து, சிறை வாசனையை மூன்று வருட காலம் அனுபவித்து, தொழிற் பயிற்சியைக் கைவிட்டு, வருங்கால வாழ்விலும் மண்ணைப் போட்டுக்கொண்டு, இறந்த தாயையும் இறக்காத தங்கையையும் பிரிந்து விடுதலையாகி வந்திருக்கிறீர்கள் - என்ன பிரயோசனம்? - இன்று காங்கிரஸ்காரன் என்ற முறையில் எனக்கு இருக்கும் மதிப்பு உன்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறதா, இருக்க முடியுமா?”

“அது சரி, அதென்ன திலகர் குருகுலம்?”

“இதுகூடவா தெரியவில்லை? காந்திஜியின் பள்ளிக் கூடப் பகிஷ்காரத்தைப் பின்பற்றிச் சிலர் விதேசிக் கல்வி பயில்வதை விட்டுச் சுதேசிக் கல்வி பயில ஆரம்பித்தார்களல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தையும் அடியேன் கை நழுவ விடவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஏதாவது பலன் கிடைத்ததோ என்னவோ, எனக்கு வேண்டிய மட்டும் பலன் கிடைத்துவிட்டது. - அடாடா! அதை ஆரம்பித்து வைத்த எனக்கு ஆனானப்பட்ட மகாத்மாவிடமிருந்தும், இன்னும் மற்ற தலைவர்கள் பிரமுகர்களிடமிருந்தும், வந்து குவிந்த வாழ்த்துத் தந்திகளும் செய்திகளுந்தான் எத்தனை எத்தனை! - இத்தனைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/82&oldid=1378713" இலிருந்து மீள்விக்கப்பட்டது