பக்கம்:கதாநாயகி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44*கதாநாயகி


போவோம்" என்றாள். குரலில் இருந்த அவசரம் அவளது பாதங்களில் இருக்கவில்லை என்றாலும், ஜனநடமாட்டம் கூடுதல்படவே, அவள் சூழலை அனுசரித்து, 'சடக்' கென்று திரும்பி நடந்தாள்.

எதிர்த் திசையில் அவள் குடியிருந்த வீடு இருந்தது.

இருவரும் வீதியைத்தாண்டி நடந்தார்கள்.

காலை இளங்காற்றில் சாய்ந்தாடிய சிவப்புச் சீமைக்கொன்றைகள் அவர்கள் இருவரையும் வரவேற்றன.

தவறு இழைத்த குழந்தை, தாய் முகம் காண அஞ்சுமே, அந்தப் பாவனையில் அஞ்சிச் செத்தாள் ஊர்வசி. ஆனால், அவளுக்கு உயிர் கெட்டி!

'நான் இருக்கேன்; பயப்படாதே நீ!'

அவளை அவன் அழைத்துச் சென்றான்.

நீதியின் வாசலைக் கடக்கத் தனக்கு அருகதை இல்லை என்பதுபோல, அவள் தன் வீட்டின் வாசலில் எள்ளத்தனை பொழுது அப்படியே சிலையாகி நின்றாள். அவளைக் கைப்பிடித்து இட்டுச் சென்றான் அவன்.

வாசல் வழிவிட்டது.

குடியிருப்பு மனையின் முதற்பகுதி நிலைப்படியில் காத்துத் தவம் கிடந்த முதியவள் ஒருத்தி ஊர்வசியைக் கண்டவுடன் ஆனந்தக் கடலாடி, "ஊர்வசி!..... வந்திட்டியாடி அம்மா? ராத்திரி முச்சூடும் என் வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேனே அம்மா?...நல்லவேளை, என் வயித்திலே பாலை வார்த்தியே!" என்று ஆனந்தப் பெருமூச்செறிந்து, மகளை வரவேற்றாள், கண்கள் கசிந்தன. வெள்ளைப் புடவையின் நுனியைக் கொய்து மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/54&oldid=1319032" இலிருந்து மீள்விக்கப்பட்டது