கனவிலே கண்ட அதிசயக் காட்சிகளையெல்லாம், இக்கதையில் நாமும் காணலாம். கதை சொல்லப்பட்டுள்ள முறை, கதையின் நடுவே வரும் வேடிக்கை உப கதைகள், பிராணிகளின் பேச்சுக்கள், வேடிக்கைப் பாடல்கள் யாவும், சுவையான இக்கதைக்கு மேலும், மேலும் சுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கதை குழந்தைகளுக்காகக் கூறப்பட்டதுதான். ஆயினும், பெரியவர்களைக் கூடக் கவரும் பெரும் சக்தி இதற்கு உண்டு. இந்தக் கதையைக் குழந்தைகள் படித்தால், குதித்துக் கும்மாளம் போடத் தொடங்கி விடுகிறார்கள்; பெரியவர்கள் படித்தால், தங்களை மறந்து குழந்தைகளாகி விடுகிறார்கள்!
விக்டோரியா மகாராணியைக் கூடச் சிறிது நேரம் குழந்தையாக்கி விட்டது இந்தக் கதை! ஆம், ஒரு நாள் விக்டோரியா மகாராணியின் கண்களில் தென்பட்டது இந்தக் கதைப் புத்தகம். அதை எடுத்துப் புரட்டி மேலாகப் படிக்க ஆரம்பித்தார் அவர். படிக்கப் படிக்க முழுவதையும் படிக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு எழுந்தது. பல முறை அதைப் படித்தார்; எல்லையில்லா மகிழ்ச்சியுற்றார்.
“ஆஹா, எவ்வளவு அழகாக இந்தக் கதையை இதன் ஆசிரியர் எழுதியிருக்கிறார்! இதைப் படிக்கும் போது, நானும் ஒரு குழந்தையாகவே மாறி விட்டேன்” என்றாராம். அத்துடன் நிற்கவில்லை. தமது காரியதரிசியை அழைத்து, “இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த ஆசிரியரின் அடுத்த புத்தகம் வெளி வந்ததும், எனக்குத் தெரிவியுங்கள். அதையும் நான் படிக்க வேண்டும்” என்றாராம்.
11