பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கவுரி ஆகிய எம்பெருமாட்டியின் தனங்கள் ஆதிநாயகனுடைய கருணையே உருவமாக இருப்பவை; அமலமாய் இருப்பவை; பரிசுத்தம் சிறிதும் குறைவு இல்லாதனவாய், மலம் இல்லாதனவாய் உள்ளவை: பரம போதமாய் உள்ளவை; போதம் என்பது ஞானம்; உயர்ந்த ஞானம் எதுவோ, அதுவே மயமானவை அவை. ஆதலால்தான் எம்பெருமாட்டி தந்த பால் ஞானப்பாலாயிற்று. அதையே ஞானசம்பந்தர் உண்டார். ஞானப் பசியை ஆற்றுகின்ற பாலை, பிறப்பு இறப்புப் பிணியைப் போக்குகின்ற பாலைக் குற்றமில்லாத ரத்தினக் கிண்ணத்தில் ஏற்று, கந்தப் பெருமானாகிய தன் மகனுக்கு கவுரி ஊட்டினாள் என்று கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார்.

பரமேசுவரனிடம் தோன்றிய முருகன் உலகத்தில் அவதாரம் செய்தமையால் ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்று, ஞான மயமாக வந்தான். அவன் ஞானப் பிழம்பு.

"நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்"

என்று அருணகிரியார் பின்னாலே சொல்லப் போகிறார். ஞானம் வேறு; அவன் வேறு அல்ல. உலகம் பயன்பெற வேண்டித் தன்னுடைய அணைப்பினால் ஆறு குழந்தைகளும் ஒன்று ஆகும் படியாக்கி, ஞான சொரூபமான தன் தனங்களில் பொழிகின்ற பாலைக் கறந்து உமாதேவி ஊட்டினாள்.

3

தாமரைத் தொட்டில்

ந்தக் குழந்தை எங்கே விளையாடினான்? அந்தக் குழந்தைக்கு யார் தொட்டில் பண்ணிக் கொடுக்க முடியும்? பனி மூடிக் கொண்டிருக்கிற இமயமலைச் சாரலிலே, தர்ப்பைக் காட்டின் நடுவில் அமைந்திருந்த சரவணப் பொய்கையில் அழகாக மலர்ந்திருந்த தாமரைகளையே தொட்டிலாகக் கொண்டு அவன் விளையாடினான். தாமரை இதழ்களின் மீது படுத்துக் கொண்டு தூங்கினான். தண்மை மலிந்த மலர்ப் படுக்கையில் கண் வளர்ந்தான். மெத்தென்ற படுக்கையாக, மென்மை மிக்க மணமுள்ள தாமரை மலர்கள் அமைந்தன. அதில் அவன் விளையாடினான்; படுத்து உறங்கினான்.

178