பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அதிகாரி, "இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை" என்ற விரதத்தோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, "இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவது? காய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மெளனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சரிதான், பேசாவிட்டால் போங்களேன். என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்? நானும் பேசாமல் இருந்துவிடுகிறேன்" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். இது ஏதடா வம்பாகப் போய்விட்டதே என்று அதிகாரி ஒன்றும் புரியாமல் மெளனமாகவே இருந்தார். "சாமி" எனக் கோயில் பூக்காரன் வந்தான். "இன்றைக்கு நிலைமாலை கட்ட வேண்டுமா? இல்லாவிட்டால் சரமாகவே கொண்டு வந்துவிடட்டுமா?" என்று கேட்டான். "போங்களடா என் உறுதியைக் குலைப்பவர்கள் போல ஏனடா நிற்கிறீர்கள்?" என்று சொல்ல வேண்டும்போல அவர் மனம் துடித்தது. வாய் பேசவில்லையே தவிர, கையையும் முகத்தையும் காட்டி ஏதோ சைகை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டே நின்றான். "சாமி மாட்டைப் பட்டிக்குப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்" என்று மாட்டுக்காரன் ஓடி வந்தான். அதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்து போய்விட்டது. உலகம் முழுவதும் அவர் மெளனத்தைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

அவருக்குத் தம்முடைய ஒரே ஒரு குழந்தையிடம் அன்பு மிகுதி. அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போயிருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் வந்தான். "மாமா, உங்கள் ராமு பள்ளிக்கூடம் வர வில்லையாம்; வாத்தியார் அழைத்து வரச் சொன்னார்" என்றான். உள்ளே மிகக் கோபமாக இருந்த அவருடைய மனைவியின் காதில் இது விழுந்தது. "ஐயையோ பள்ளிக்கூடம் போகிறேன் என்று அவன் எட்டு மணிக்கே போய்விட்டானே! எங்கே போனான்? கொஞ்சம் தேடிப் பாருங்களேன்" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். "அப்படியா! எங்கே போயிருப்பான்? தனியாகவா போனான்?" என்று அதிகாரி பேசிவிட்டார்.

2.94