பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அவன் ஒளி விடுகிறான். அகல் விளக்கையே பார்த்துப் பழகிய நாட்டுப்புறத்தான் சென்னபட்டினம் வந்தால் மின்சார விளக்கைப் பார்த்து வியக்கிறான். 'இந்த விளக்கு ஆச்சரியமாக இருக்கிறதே! திரி இல்லை; எண்ணெய் இல்லை. ஒன்றும் வேண்டாமல், தானே எரிகிறதே!' என மலைப்பான். ஆனால் நமக்கு உண்மை தெரியும்; இந்தப் பல்பு சும்மா எரியவில்லை. மின் கம்பி போட்டிருக்கிறோம். மின்சார சக்தி அதனுள் ஒடுகிறது. அதனால் பல்பு எரிகிறது என்பது தெரியும். அதைப்போல, நமக்குத் தெரியாவிட்டாலும் பெரியவர்கள் அறிந்து சொல்கிறார்கள்; சூரியனுடைய ஒளிக்கு இறைவனே காரணம் என்கிறார்கள். 'அருக்கனிற் சோதி வைத்தோன்” (திருவாசகம்) என்று ஆண்டவனைப் புகழ்கிறார்கள். கதிரவனுக்கு ஒளியை வழங்கினவன் ஆண்டவன். எவன் எல்லாச் சோதிக்கும் மேலான சோதியாக இருக்கிறானோ, அவன்தான் தனிப்பெருஞ்சோதி; அருட்பெருஞ் சோதி; சுயஞ் சோதி; பரஞ்சோதி. அந்தச் செழுமை மிக்க சுடரான ஆண்டவன் பெரிய மலையாகிய திருச்செங் கோட்டின் மேல் ஒளிவிட்டுக் கொண்டு விளங்குகிறான்; மலை விளக்காக இருக்கிறான். சாதாரண விளக்கு இந்த உலகத்துப் பொருள்களைக் காட்டும். மலை விளக்காக இருக்கிற ஆண்டவன் உலகினுடே உள்ள உண்மைப் பொருளைக் காட்டுகிறான். புகைப்படம் எடுக்கிறோம். அவை நமது மேல் உடம்பைக் காட்டுகிறது. உடம்புக்குள் என்ன இருக்கின்றன என்று அது காட்டுவது இல்லை. ஆனால் எக்ஸ்ரே மூலம் படம் எடுத்தால் உடம்புக்குள் இருக்கும் பொருள்களையும் காட்டுகிறது. சாதாரணப் போட்டோவைக் காட்டிலும் எக்ஸ்ரே எடுப்பதற்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டும். அது நுட்பமான கருவிகளை உடையது. அந்த எக்ஸ்ரேயினாலும் காட்ட முடியாத பொருள்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டுவது ஆண்டவனுடைய பேரொளி. அதனால்தான் திருமுருகாற்றுப்படையில், "சேண்விளங்கு அவிர்ஒளி' என்று நக்கீரர் பாடுகிறார். முருகன் ஒளி நெடுந்துரம் வரையிலும் வீசுகிறதாம். 178