பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மன வாக்குச்செய லாலே அடைதற் கரிதாய் அருவுரு வாகிஒன்று போலே இருக்கும் பொருளைஎவ் வாறு புகல்வதுவே? அந்த இன்ப அநுபவத்தை விளக்க முடியாது. மன வாக்குச் செயலாலே அடைவதற்கு அரியவன் அவன். மூன்று கரணங் களினால் மனிதன் எல்லாவற்றையும் அறிகின்றான். இந்த மூன்று கரணங்களுக்கும் உட்பட்ட பொருளாக அவன் இருந்தால் அவனை அடைந்து, அறிவிக்க முடியும். கரணங்களின் நுகர்ச்சிக் கும் அப்பாற்பட்டவனாக அவன் இருக்கும்போது அவனை எப்படிச் சொல்வது? மனத்தினாலே அடைவதற்கும், வாக்கினாலே அடைவதற்கும், செயலாலே அடைவதற்கும் அரியதாய் இருக்கும் பொருள் அது. உருவம் எதுவும் இல்லாதது அது; அருவே உருவமானது. இத்தனை நேரம் அவர் ஏதோ உருவம் உடைய பொருளாகச் சொல்லி வந்தார். ஆனால் அநுபவ நிலையில் அது அருவே உருவாக இருக்கிறது. ஒன்று போலே இருக்கும் பொருளை. இன்று ஒரு விதம், நாளை ஒரு விதம் என்று மாறுதல் இன்றி ஒரு படித்தாக, ஒன்றுபோல இருக்கும் பொருள் அது. 'வாசலைக் காட்டிவிட்டேன். இனி நீயே உள்ளே நுழைந்து போய்ப் பார்க்க வேண்டியதுதான். அகண்ட சொரூபமாக இருக்கும் பொருளைக் கண்டமாகக் காட்டினேன். இனி நீயே கண்டமாக இருக்கும் ஒன்றின் அகண்ட சொரூபத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளே நுழைந்து அவனைக் காணவேண்டு மானால் வாசற் படியாக இருக்கின்ற அவன் திருவடிகளில் தலை வைத்து வீழ்ந்து இறைஞ்சு, இறைஞ்சி மால் கொண்டால் உனக்கே தெரியும். நீயே காணமுடியும். நான் கண்ட மாதிரியே காணமுடியும். ஆனால் நான் எவ்வாறு கண்டேன் எனக் கேட்டுப் பயனில்லை. என் அநுபவத்தை எப்படிச் சொல்ல முடியும்? மன வாக்குச் செயலுக்கு அப்பாற்பட்டதை வாக்குக்கு உட்படுத்த இயலாது. அதை எவ்வாறு புகல்வது?" என்கிறார் அருணை முனிவர். 298