பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 'அவன் கொள்ளிக் கண்ணால் பார்த்தான். செடி பட்டுப் போய் விட்டதே குழந்தை அன்றைக்கே ஜூரம் என்று கீழே படுத்துக் கொண்டு விட்டது” என்று சொல்வதைக் கேட்பது இல்லையா? உள்ளத் திலே தோன்றுகிற அசுர சக்திகளுக்கு அத்தனை ஆற்றல் உண்டு. பிறருக்குத் தானம் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளத்தின் விளைவு. உள்ளத்தில் அன்பு இருந்தால்தான் கொடுக்கத் தோன்றும். உள்ளத்தில் பற்று மெல்ல மெல்ல நழுவி, தன்னிடம் உள்ள பொருள்களை எல்லாம் பிறருக்குக் கொடுக்க வேண்டு மென்ற அன்பு நினைவு எப்பொழுது உண்டாகிறதோ, அப்பொழுது இறைவன் நமக்கு அருள் பாலிக்க வருகிறான். தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள். உள்முகப் பார்வை இந்த விரிந்த உலகத்திலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களது பார்வை எல்லாம் வெளி நோக்காக இருக்கிறது. ஒருவர் பார்த்ததை இன்னொருவர் பார்க்கவில்லை. அவரவர்கள் தாம் தாம் கண்டதே உண்மை எனச் சொல்கிறார்கள். எல்லோரும் மையத்தின் வெளிவட்டக் கோட்டில் நிற்கிறார்கள். அவர்கள் பிரயாணத்தை வட்டத்தின் உள்முகமாகச் செலுத்தினால் எல்லோரும் வந்து சேருகின்ற இடம் மையப் புள்ளி ஒன்றுதான். புற நோக்கமானது வேறுபாட்டை வளர்த்து வரும். பார்வையை உள்முகமாகச் செலுத்தினால், வேறுபாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கிற பரம்பொருளைத் தெரிந்து கொள்ள முடியும்; அன்பு பெருகி, நாம் எல்லோரும் சகோதரர்கள், இறைவனுடைய குழந்தைகள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். "பல பல பொருள்களைப் பார்த்துப் பார்த்து விரிந்து கொண்டே போகிற மனத்தைத் தடுத்து உள்முகமாகச் செலுத்து; உள்ளே பொங்குகின்ற கோபத்தை அடக்கு. எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையால் ஈட்டிக் கொண்டே இருக்கும் பொருள்களை எல்லாம் வாரி வாரித் தானம் வழங்கு. KSC