பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அம்பரம் பம்பரம் பட்டுழல. ரெயில்வண்டி போகிற வேகத்திலே கீழே கிடக்கும் பொருள் கள் எல்லாம் பறக்கின்றன. அப்படி மேரு கிரியை மத்தாக வைத்து, உரகபதியாகிய வாசுகியைக் கயிறாகக் கொண்டு பாற் கடலைக் கடைந்த வேகத்திலே, அம்பரம் ஆகிய ஆகாசம் பம்பரம் போலச் சுழன்றது. மதித்தான் திருமருகா! மதித்தல் - கடைதல். அப்படிக் கடைந்தவன் திருமால். அவனுடைய அருமையான மருகன் முருகன். அவனைப் பார்த்து வேறு ஒர் அமுதத்தைக் கேட்கிறார். "அப்பனே, எனக்கு உன் னுடைய அருளாகிய அமிருதம் கிடைக்கும் காலம் உண்டா?” என்று கேட்கிறார். ஒட்ட வைத்தல் பாற்கடலில் இருந்து வந்த அமிருதம் யாரையாவது ஒட்ட வைத்ததா? அமிருதம் வருவதற்கு முன்பும் சண்டைதான். அது வந்த பிறகும், 'எனக்கு, உனக்கு?’ என்ற சண்டைதான். அமிருதத்தை வழங்கும்போதாவது திருமால் அசுரர், தேவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சேர்த்து வைத்துக் கொடுத்தாரா? அசுரர்களையும் தேவர்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துத் தேவர்களுக்கு வழங்கினார். அசுரர்களுக்கு அந்த அமிருதம் ஒட்டவில்லை. முருகன் வழங்குகின்ற அமிருதம் அப்படிப்பட்டது அன்று. "நீயும், நானும் ஒட்டிக் கொள்ளும்படி செய்யுமே, இந்த அமிருதம்' என்கிறார் அருணகிரியார். உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்தெனை உன்னில் ஒன்றாய் விதித்து ஆண்டு அருள்தரும். உதித்து - பிறந்து. ஆங்கு உழல்வதும் - உலகத்திலே சதா உழன்று ஒரு நிலைப்பட்டு நில்லாமல் திரிவதும். சாவதும் - மரணம் அடைவதும். தீர்த்து - இல்லாமல் ஒழித்து. பிறப்பிப்பது பிரம்மாவின் தொழில். உழலச் செய்வது திருமாலின் செயல். சாகச் செய்வது ருத்திரன் வேலை. இந்த மூன்று மூர்த்திகளும் நம்பால் வேலை இல்லாமல் செய்வான். 142