பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அவனது அருள் பிரசாதமாக அவனுக்குச் சூட்டப்பட்ட கடம்ப மலர் மாலைகள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லையே' என்று அவனிடம் காதல் கொண்ட பூங்கொடி போன்ற மென்மையான உள்ளம் படைத்தவர்களுக்கு அந்த மனமே அழிந்து போயிற்று. தேங்கடம்பின், மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம். பூங்கொடியார் மனம் செத்துப் போய்விட்டது. புருஷ உத்தம னாகிய ஷண்முகநாதனின் மேல் சூட்டப்பட்ட கடம்ப மாலை களுக்கு ஆசைப்பட்டு, விரக தாபத்தினால் தவிக்கின்ற பூங்கொடி யார் மனம், பிற பொருள்களின்பால் உள்ள மையல்களை எல்லாம் மாய்த்து, கடைசியில் தானும் மாய்ந்துவிட்டது. அதனால் விளைந் தது என்ன? மனமற்ற நிலை; அதுவே இன்பம்; அதுவே முத்தி. 'மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்' என்பர் தாயுமானவர். பூங்கொடியார் எம்பெருமானிடத்தில் பத்தி பண்ணினால் அவனால் படைக்கப் பட்ட உலகிலுள்ள உயிர்க்கூட்டங்களிடம் தயை பெருகும். அவர் களுடைய வாக்கிலே, செயலிலே அன்பு பெருகும். அவர்கள் நடையிலே மென்மை இருக்கும். மென்மையான உள்ளம் படைத்த பூங்ககொடியார்களாகவே ஆகிவிடுவார்கள். அத்தகையவர்கள் மனமற்று நிற்கிறார்கள். அடுத்த அடியிலே புராணக் கதையை நினைப்பூட்டுகிறார் அருணகிரியார். சூரசங்காரம் முருகப் பெருமான் சூரனைச் சங்காரம் செய்ய அவ தரித் தான். சூரன் மலையைத் தனக்குக் கவசமாகப் பூண்டு கடலுக்குள் ஒளிந்து கொண்டான். முருகப் பெருமான் தன் கையிலுள்ள ஞான சக்தியாகிய வேலை விடுத்தான். அதனால் கடல் சுவறிவிட்டது. சூரனும், சூரனுக்குக் கவசம் போன்றிருந்த மலையும் அழிந்தன என்கிற வரலாறு நமக்குத் தெரியும். மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும். 16O.