பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் நினைப்பது மிக எளிது. அந்த நினைவு எந்தச் சமயத்தில் இருக்க வேண்டும், எந்தச் சமயத்தில் இருக்கக் கூடாது என்ற வரையறை இல்லை. "நாம் உடம்பெல்லாம் அழுக்காக நீராடாமல் இருக் கிறோம். அப்போது இறைவனை நினைக்கலாமா?" என்று சிலர் கேட்பது உண்டு. உடம்பில் தூய ஆடை அணிவதற்கு அழுக்கான உடம்பு கூடாது. உண்ணுவதற்கு அழுக்கான வாய் கூடாது. ஆனால் இறைவனை நினைப்பதற்கு உடம்பு எப்படி இருந் தாலும், வாய் எப்படி இருந்தாலும் மனம் தெளிவாக இருந்தால் போதும். - மனத்தால் இறைவனை நினைப்பதற்கு, உடம்பு என்ன காரியம் செய்து கொண்டிருந்தாலும், வாக்கு வேறு காரியத்தைச் செய்தாலும் தடை இல்லை. உடம்பு மகளிருடைய கலவி இன்பத்தை அடைந்து கொண்டிருக்கும்போது மனம் வடிவேலை நினைக்கலாம். இது சாத்தியமான செயலே. சுந்தரர் இயல்பு சுந்தரமூர்த்தி நாயனார் இத்தகைய பழக்கத்தைச் செய்து கொண்டவர். 'நற்ற வாவுனை நான்ம றக்கினும் சொல்லு நாநமச்சி வாயவே' என்று அவர் பாடுகிறார். ஒரு சமயம் அவர் திருவொற்றியூருக்குச் சென்றார். அங்கே சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். அவருக்கு, 'நான் இந்த ஊரை விட்டு வெளியில் செல்ல மாட்டேன்' என்ற உறுதியைச் செய்துகொடுத்திருந்தார். ஆனால் திருவாரூரின் நினைவு வந்தமையினால் திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறிய குற்றத்திற்காக இறைவன் அவருடைய கண் ஒளியை மறைத்தான். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நினைத்துக் கதறுகிறார். 'இறைவனே! நான் உன்னை மறக்கவில்லையே! என் நா உன் நாமத்தை மறக்கவில்லையே! இப்போது நான் குருடனாக இருக்கிறேன். எவ்வளவோ சமயங்களில் தடுக்கி விழுகிறேன். அப்படி வழுக்கி விழும்போது ஐயோ அப்பா என்று அலறுவது இல்லையே! எப்போதும் உன் திருப்பெயரையே சொல்கிறேன். இது எப்போதும் நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு அடையாளம் அல்லவா?' என்கிறார். 3S