பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் ஆடினாள்; ஏசினாள். அவளது உள்ளத்தில் கொண்டுள்ள உண்மைக் காதலைச் சோதிக்க முருகன் பல விளையாடல்களை நிகழ்த்தி னான். அவனுடைய பரீட்சைகளில் வெற்றிபெற்றாள் வள்ளி. நன்றாகப் படிக்காதவர்கள் பரீட்சைக்குப் பயப்படுவார்கள். வள்ளி யெம்பெருமாட்டி நன்றாகப் படித்தவள்; முருகப் பெருமானைத் தவிர வேறு யாருக்கும் உரியோம் அல்லோம் என்று படித்தவள். அவளுடைய பக்குவம் உயர்ந்து நிற்பதைக் கண்டு அவளை முருகன் ஆட்கொண்டான். அவளுடைய முற்றாத் தனத்திற்கு இனிய பிரான் ஆனான். காம மிகுதியினாலே அவளுக்கு இனியவன் ஆனான் என்று நினைக்கலாமா? வெளித்தோற்றத்தையே உண்மை என்று நினைந் தால், அவனுடைய புறத் திருவிளையாடலைக் கண்டு அதுதான் மெய் என்று ஏமாற வேண்டியதுதான். ஒரு குழந்தை முற்றத்திலுள்ள நீர்த் தொட்டியைப் பார்க் கிறது. அதிலே முழுமதியின் வடிவம் நன்றாகத் தெரிகிறது. 'அம்மா, சந்திரன் சந்திரன்!” என்று அதைப் பிடிக்க நீருக்குள் கையை விடுகிறது. நீர் கலங்கிவிட்டதால் பிரதிபிம்பம் பூர்ணமாக இல்லா மல் உடைந்துவிடுகிறது; மங்கிப் போகிறது. குழந்தை, "சந்திரன் உடைந்து விட்டானே, கலங்கிவிட்டானே" என்று அழுதால் அது உண்மையாகுமா? தண்ணீரில் தோன்றும் பிரதி பிம்பம் உடைந் தது உண்மை; ஆனால் அது வெறும் தோற்றம். வானத்தில் முழுமதி நன்றாக ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே புறத்தோற்றத்தில், எம்பெருமானின் ஞானநாடகத்தின் வெளித் தோற்றம், உலக மாயையோடு சம்பந்தப்பட்டு மலங்களோடு சேர்ந்து தொழில் படுகிறவர்களுக்கு ஊன நாடகமாகத் தோன்று கிறது. தன்னுடய கருணை மிகுதியினாலே, சாதியாலும், சமயத் தாலும், நாகரிகத்தாலும் மிகவும் தாழ்ந்தவள் என்று உலகினோர் நினைக்கும் வள்ளி நாயகியின் பக்குவம் உணர்ந்து, வலிய வந்து ஞானநிலை நிறைவுறத் செய்து ஆட்கொண்ட திருவிளையாடல் அல்லவா அது? இணைத்துப் பார்க்க வேண்டும் கரும்பு வில்லும் முல்லை மலரம்பும் வெந்து காமவேள் படும்படியாக விழியால் செற்றவனுக்கு இனிய பிரான் என்று 2O5