பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இல்லை என்று அருணகிரியார் சொல்ல வருகிறார். ஆனால் அப்படிச் சுருக்கமாகச் சொல்லவில்லை. அடிக்கடி மறந்து போகும் பொருளை நினைப்பூட்டிக் கொள்ள வேண்டுமானால் அதைப்பற்றிப் பல வகையில் சொன்னால் அந்த நினைவு உண்டாகும். எத்தனை சொன்னாலும் மறதி வந்து கப்பிக் கொள்கிற இயல்பு உடையவர்கள் நாம். அறிவு உடையவனுக்கு இன்னார் இந்த ஊரில் இருக்கிறார் என்று சொன்னால் போதும். ஊர் தேடி, தெருத் தேடி, விலாசம் தேடி அவரைப் போய்ப் பார்த்து விடுவான். அவன் அறிவு அவர் இருக்கும் இடத்தை ஆராய்ந்து தேடுவதற்கு உதவி செய்யும். ஆனால் அறிவு அற்றவர் களுக்கோ இன்ன ஊருக்கு இப்படிப் போக வேண்டும், இன்ன வண்டியில் ஏறவேண்டும், இன்ன இடத்தில் இறங்கவேண்டும், இன்ன தெருவில் இன்ன எண்ணிக்கையுள்ள வீட்டில் போய் விசாரிக்க வேண்டும், அவர் இன்ன உருவோடு இருப்பார், இன்ன நேரத்தில்தான் இருப்பார் என்று பலவகை அடையாளங்கள் சொல்லிக் காட்டவேண்டும். அந்த வகையில் யாரை நினைக்க வேண்டுமோ அந்தப் பெருமானுக்குரிய அடையாளங்களை அருணகிரியார் பலவகையில் இந்தப் பாட்டில் சொல்கிறார். எட்டு அடையாளங்களைச் சொல்லிக் காட்டி அத்தகைய இயல்பு களைப் பெற்ற முருகனைச் சாந்துணைப் போதும் மறவாதவர்கள் யாதொரு தாழ்வையும் அடையமாட்டார்கள் என்று சொல்கிறார். சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் - செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை சாந்துணைப் போதும் மறவாதவர்க்குஒரு தாழ்வு இல்லையே. இறக்கும் வரைக்கும் மறக்காமல் இருந்தால் பிறகும் அந்த நினைவு தொடர்ந்து வரும் என்று சொன்னேன். இந்த உடம்பு எடுத்தவுடன் நம்முடைய நினைவுக்கு ஒரு திரை போட்டது போல மறதி வந்து விடுகிறது. இறந்தபிறகு, மறந்த நினைப்புகள் எல்லாம் மீட்டு வரும். ஆகையால் இடையிலே மறதிக் காலமாக வந்த இந்தப் பிறவியைப் பெற்ற நாம் இறக்கும் வரைக்கும் மறவாமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார். 186