பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் அந்தக் கசிவு தேங்கி நிற்கும். தாம் பெற்ற அநுபவ அதிசயத்தை அவர்கள் சொல்லும்போதே சர்க்கரைப் பொங்கல் உண்டவன் ஏப்பம் விடுவது போலத் தோற்றும். அவை அநுபவத்தையே சுட்டிக்காட்டும் பாடல்கள் அல்ல; முன்பு சொன்னதைப் போலச் சுற்றிக் காட்டும் பாடல்கள். ஆகவே, இங்கே வாக்கினாலே சொல்லிவிட்டாரே என்றால், அந்த அநுபவம் சொல்வதற்குரியது என்று எண்ணக் கூடாது. கந்தர் அநுபூதியில், "பேசா அநுபூதி பிறந்ததுவே" என்று பாடுகிறார். 'அப்படியானால் இந்த அநுபவத்தைப் பாடி யிருக்கிறாரே என்று கேட்கலாம். அவர் அடைந்த அநுபூதி வேறு. அதனைப் பெற்றதனால் உண்டான ஆனந்த அதிசயப் பெருக்கை அநுபூதி என்ற பெயருடன் சொல்கிற பாடல்கள் வேறு. அதனால்தான் இங்கே, வாக்கும் இல்லாது ஒன்று வந்து வந்து தாக்கும் என்றார். திரிபுடி ரகிதம் இன்ப அநுபவம் பெறும்போது அநுபவத்தைப் பெறுகின்ற வன், அதனைத் தருகின்றவன், அநுபவம் ஆகிய மூன்றும் வெவ் வேறாகத் தோன்றுவது இல்லை. அவன் வேறு என்று உணரவும் முடியாது. காண்பான், காட்சிப் பொருள், காட்சி என்னும் மூன்று வேறுபாடும் இல்லாத நிலை அது. இந்த மூன்றைத் திரிபுடி என்று சொல்லுவார்கள். இந்த மூன்றும் அற்றநிலை திரிபுடி ரகிதம். அறிவான், அறிவு, அறியப்படும் பொருளாகிய ஞாத்ரு, ஞான, ஞேயம் என்றும் திரிபுடியைக் கூறுவார்கள். இறைவன் அருள் அநுபவத்தில் இந்த மூன்றும் மறைந்து போய்விடும். உலக இயலில் நம்முடைய நிலையோ இதற்கு முற்றும் வேறுபட்டது. ஏதேனும் ஒரு பண்டம் இருக்க வேண்டும. அதைப் பார்க்கும் கண் இருக்க வேண்டும். கண்ணுக்குப் பார்க்கும் ஆற்றல் இருக்க வேண்டும். பண்டம், கண், பார்வை ஆகிய மூன்றும் இல்லாவிட்டால் காட்சி என்பது இல்லை. கண்பார்த்தாலும் பண்டம் இல்லாவிட்டால் காட்சி நிகழாது. 2O7