பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நோக்கலாம். அப்போது தெளிவு உண்டாகும். ஆகவே எந்த நிலையானாலும் இறைவன் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே கையில் வேலையும், காலில் கழலையும் கொண்டிருக்கிறான் என்று சொல்வாரைப் போல, வேல்வாங்கி பூங்கழல் என்றார் சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேரஎண்ணி மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில்கட்டும் நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்குநெஞ்சே. (நெஞ்சமே, சேல்மீனை வெல்லும் கண்ணையுடைய மகளிருடைய அழகிய நகிலை அணைய எண்ணிக் காமத்தைப் பெற்று ஏக்கம் அடைந்து மயங்காமல், வெள்ளிமலை என்று சொல்லும்படியாகக் காலை எடுத்து வைத்து நிற்கும் யானையையுடைய இந்திரனுடைய மனைவியாகிய இந்திராணி தன் கழுத்தில் கட்டிய மங்கல நூலைக் கழுத்திலிருந்து கழற்றாமல் அந்தப் பழங்காலத்தில் வேலை விட்ட முருகனுடைய பூவைப்போன்ற திருவடியைத் தியானம் பண்ணுவாயாக. வண்ணம் - அழகு. பயோதரம் - பாலைத் தாங்குவது; நகில். மால் - மயல்; காமம். கால் வாங்கி - காலை எடுத்து வைத்து. களிறு - ஐராவதம். கிழத்தி - மனைவி. நூல் - மாங்கல்ய சூத்திரம். வாங்கிடாது - கழற்றாமல். வேல் வாங்கி: பெயர். பூ - தாமரை மலர். கழல்: ஆகுபெயர். நோக்கு - தியானம் செய்; நெஞ்சத்தை விளித்துச் சொன்னமையால் இங்கே தியானம் செய் என்று பொருள் கொள்ள வேண்டும். நெஞ்சையும் உறுப்புடையது போல வைத்துப் பேசும் மரபு உண்டு; ஆதலின் நீ தரிசனம் பண்ணு என்றும் பொருள் கொள்ளலாம்.) i இது கந்தர் அலங்காரத்தில் 77-ஆவது பாடல். 294