பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 யான்தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது என்று சொன்னார். இதை விளக்கமாகப் புரிந்துகொள்ள ஓர் அநுபூதிப்பாட்டை இங்கே பார்க்க வேண்டும். 'யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே.” இங்கே இறைவனை வெறும் தான் என்று சொல்கிறார். யான் என்பதற்கு இனமாகிய தான் என்பது வேறு, வெறும் தான் என்பது வேறு. தான் என்பதற்கு அவன் என்பது பொருள். அது படர்க்கைப் பெயர். யான், நீ, தான் என்பன முறையே மூன்று இடங்களுக்கும் உரிய சொற்கள். அங்கே தான் என்பது படர்க்கை; அவன் என்ற பொருளை உடையது. இந்த மூன்று சொற்களும் சொல்லும் நிலையில் மூன்று பொருள்களும் வேறாகத் தோன்றும். யான் என்பது கெட்டால் எல்லாச் சொல்லும் கெடும். தான் என்ற ஒன்றே நிலைநிற்கும். அப்போது அதனைச் சுட்டிக்காட்ட, தான் என்று சொல்லால் சொல்ல, யாரும் இல்லை. ஆகையால், 'யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது. தற்பரமே.” என்று அநுபூதியில் சொன்னார். இந்த அலங்காரத்தில், யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம் என்று சொல்கிறார். யான் தான் என்னும் பொருள் இரண்டும் கெடுவது இல்லை. யான் கெட்டு, தானுடன் இசைய வேண்டும். அப்போது தான் என்று சொல்வதற்கு ஆளும் இல்லை; பேச்சும் இல்லை. பொருள்கள் இரண்டு ஒன்றாகும்போது சொல்ல ஆள் இல்லாத அநுபவ நிலை உண்டாகிறது. சொற்கள் இரண்டும் அப்போது இல்லை. பொருள் இரண்டைக் கண்டு இருவேறு சொல்லாகச் சொன்னாலும், பிறிதாக நிற்கும் ஒன்றை வேறாகக் கண்டு அதை மட்டும் சுட்டினாலும் பேதநிலைப் பேச்சுத்தான். இரண்டற்ற அத்துவித நிலை அன்று. இரண்டற்ற அத்துவித நிலையில் யான் தான் என்னும் சொல்லுக்கு இடம் இல்லை. எந்தச் சொல்லுக்கும் இடம் இல்லை. எங்கே சொல் நிற்கிறதோ அங்கேதான் அநுபவம் கிடைக்கிறது. 262