4 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
2 உளம் புகுந்த தமிழச்சி!
திருமிகுந்த உருவுடையாள்: சீரமைந்த சொல்லாள்!
தேன்கசியும் மொழிநிறைந்தாள்! திட்பநுட்ப முள்ளாள்!
பருமிகுந்த உட்பொருளும், பயன்மிகுந்த உரையும்,
பல்சுவையும் நிறைந்தொளிரும் திறமிகுந்த பேச்சும்,
கருமிகுந்த மெய்யுணர்வும், கனிவுநிறை அன்பும்
களிப்பெழுந்து பொங்குகின்ற காதல்விளை நோக்கும்
தருமிகுந்த மதிபடைத்தாள்! தமிழெனும் இன் பெயராள்
தமிழனெனை இளமையிலே கண்டுளத்தை வென்றாள்!
தொல்குடிமைப் பிறப்புடையாள்; ஓங்குசிறப் புடையாள்;
தோல்வியிலாப் பாண்டியர்தம் குலக்கொடியின் வித்து!
பல்புலவர் தமிழ்மடியில் பயின்றுவிளை யாடிப்
பாடலிலே உளந்திளைத்துக் கண்வளர்ந்த செல்வி!
வெல்மறவர் தோள்களிலே மறம்வளர்த்த வல்லி;
வேற்றுவரும் சீர்மடுத்தே ஏற்கவரும் நங்கை;
மல்குபெரும் பேறுடையாள்! மன்னுதமிழ்ப் பெயராள்!
மயலறியாப் போதிலந்த மங்கையெனை வென்றாள்!
இலக்கணத்துப் புலமையினாள்! இலக்கியங்கள் கண்டோள்!
எவ்வெவரும் வியந்துரைக்கும் பொருள் விளக்கம் பெற்றாள்!
துலக்கமிலாப் பிறமொழிகள் தோன்று முனந் தோன்றித்
துலங்கியசீர்த் தன்மையினாள்! இளமைவளங் குன்றாள்;
கலக்கமறு நல்லற நூல் விளக்கமுறக் கற்றாள்!
காதலுக்குத் தூய்மையினாள்! சாதலிலா நல்லாள்!
குலக்கொழுந்து; நிறைவுடையாள்! கொழுந்தமிழென் பெயராள்!
கொஞ்சுமொழி கூறியிள வஞ்சியெனை வென்றாள்!
செங்கனிவாய்க் கிள்ளையினைச் சிறுமைசெயு மியலாள்;
சீருயர்ந்த குயின்மொழியைக் கொடுமைசெயு மிசையாள்;
பொங்குணர்வால் துடிப்புறுநற் கூத்தியக்கும் வல்லாள்;
புதுக்கலைக்குஞ் சலிப்படையாப் புத்திளமைக் காரி!
தங்குயர்தொல் காப்பியமும், தொகையெட்டும் பத்துத்
தனித்தமிழ்சேர் பாட்டுகளும் பதினெண்கீழ்க் கணக்கும்
மங்கையறி வாளவற்றை விழைந்தவர்க்குஞ் சொல்வாள்!
மனந்துலங்கா இளமையிலே எனைவளைத்துக் கொண்டாள்!