உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனிச்சாறு - முதல் தொகுதி

அலைக்கழிக்கின்றது. இவ்வியற்கைப் பொது நிலைகளையொட்டி, ஒவ்வொருவரும் சில இன்றியமையாக் கலை, இலக்கியக் கூறுகளை உணர்ந்திருத்தல் வேண்டும். இவற்றுள் கலை புறமும் இலக்கியம் அகமும் ஆகும். இலக்கியத்தின் கொடுமுடி பாடல்! பிற அவற்றினின்று விரிந்து படரும் கொடிகளையும் கிளைகளையும் போன்றவை.

ஒழுங்கற்ற ஓசையைவிட ஒழுங்கான ஒலி உயிர்க்கவர்ச்சி உடையது. ஒலியொழுங்கோடு உணர்வும் சேருமாயின் உயிர்க் கவர்ச்சியுடன் உளக்கவர்ச்சியையும் அஃது உண்டாக்கி, அறிவுணர்வு உயர்ச்சியுடைய மாந்தனை அது தன்வயப்படுகிறது. இனி, உணர்வு சேர்ந்த ஒலியொழுங்குடன் ஏற்ற இறக்க அலைவொலிகள் அளவொத்து இணைதலும், பின் அவற்றுடன் ஏதாமொரு மொழி சேர்தலும், அவற்றைப் பண் என்றும் பாவென்றும் உயர்நிலைப்படுத்துவிக்கும். இப்பண்ணொடு தாளம் சேர்ந்து இசையென்றும், பாவொடு கருத்துச் சேர்ந்து பாடல் என்றும் தமிழில் வழங்கும். இனி, பண்ணும் பாடலும் சேர்ந்து நடக்கும் இசைத்தமிழ் என்னும் ஒரு மொழியியல் மரபையே பண்டைத் தமிழ்மொழி முனைவோர் உலகோர் உணர்ந்துய்ய உண்டாக்கித் தந்துள்ளனர். வேற்றுமொழிகளில் இம் மொழியியல் கூறு தோன்றியிருப்பினும் தமிழ்மொழியில் உள்ளதுபோல், அஃது அத்துணையளவு தனித்தோ, சிறந்தோ இயங்கவில்லை யென்பதை அறிவினார் உணர்வர்.

இனி, பாடல் என்பது பா தழுவிய கருத்துமொழி என்று பொதுவில் பொருள்தரினும், அதற்கெனப் பல தனிக்கூறுகள் உண்டு. பாடல் இயற்கையாக வெளிப்படுதல் வேண்டும். மனமும் அறிவும் வயப்பட, உணர்வும் எழுச்சியும் மேம்பட்டுப் புறநிலையழுத்தத்தால் பீறிக்கொண்டு வெளியேறும் பாடலிலேயே இயற்கைச் சாயல் படிந்திருக்கும் மொத்தத்தில் அஃது ஒரு வெளிப்பாடாக இருத்தல் வேண்டுமேயன்றி, வெளிப்படுத்துதலாக இருத்தல் கூடாது. அவ்வாறு உள்ள நிலையில் அது சிறவாது; நிலைத்து நிற்காது; அதுவன்றிக் காலத்தில் கரைந்து போகும் தன்மையுடையதாக அஃது இருக்கும்.

ஓர் உணர்வு சான்ற இயற்கைப்பாடல் உணர்வுள்ள உள்ளங்களை மட்டுமேயல்லாது, உணர்வற்ற உள்ளங்களையும் அவையளவில் தொடுதல் வேண்டும். அப்பொழுதுதான் அஃதால் உயிர்க்கூறு படிப்படியாக மலர்ச்சி எய்துதல் முடியும். பிற உள்ளங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/5&oldid=1419532" இலிருந்து மீள்விக்கப்பட்டது