பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 45
சிட்டென் இளையோர் சிறுவாயில் செந்தமிழின்
மட்டு தவிர்த்துயரா மால்மொழியை ஊட்டுவர்காண்!
மொட்டென் அவர்கை முதிரா மொழியெழுத
ஒட்டா தவர்நெஞ்சில் ஊமைமொழி பாய்ச்சுவர்காண்!
மொட்டென் விழியாய்! முழுநிலையும் கண்டறிந்தே
பட்டின் படுக்கை படுத்துக் கிடத்தியே!
சட்டென் றெழுவாய்! சளைக்காமல் நின்கருத்தை
வெட்டொன்று துண்டிரண்டாய் வீசேலோ ரெம்பாவாய்!
29
கூர்த்த மதியீர்! குறைகடியும் வல்விறலீர்!
ஆர்த்த பெரும்புகழ்மேல் ஆணையிட்டே ஆர்த்தெழுவீர்!
போர்த்த இருள்விலகப் பூவையர்நும் சீர்விளக்கச்
சீர்த்த பெரும்புயலா வல்பிடியாச் செற்றிடுவீர்!
தூர்த்த புகழெல்லாம் தொல்தமிழர் பாடெல்லாம்
ஏர்த்தடங்கண் பாவையரால் மீண்டும் எழுந்தவென்றே
வார்த்த நெடுங்கல் வழிவழிக்கே நின்றுரைக்கும்
சீர்த்தி பெறுகுவீர்! செற்றேலோ ரெம்பாவாய்!
30
-1965
(இந்தியெதிர்ப்பால் வேலூர்ச்சிறையுள்
பட்டிருந்த ஞான்று பாடியது.)