உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 கனிச்சாறு – முதல் தொகுதி

வளர்ந்துவரும் இளையோர்க்கும் மங்கையர்க்கும் நெஞ்சு
வளம் கொழிக்கும் அறஞ்சான்ற தமிழ்க்கல்வி வாய்ந்தால்
தளர்ந்துவரும் உடல்களிலே வீறுவரும்; தோளில்
தாவிவரும் பூரிப்பு; முகத்திலொளி மின்னும்!
கிளர்ந்துவரும் மெய்யன்பு; கீண்டியெழும் பண்பு!
கிளத்துகின்ற உரைகளெலாம் தேன்சுவையை விஞ்சும்!
வளர்ந்துவரும் உளத்தூய்மை! விளைந்துவரும் வாய்மை!
வினைகளிலும் அஞ்சாமை நேர்மைவரு மன்றோ?

தமிழர்க்குத் தமிழ்நெஞ்சம் வாய்த்துவிடு மாயின்
தமிழ்க்குருதி உற்றெடுக்கும்; தமிழுணர்வு வீறும்!
உமிழ்கின்ற வல்லடிமை மொழியடிமை சாகும்!
ஊக்கமிகும்! தாக்கவரும் பகைதூளாய்ப் போகும்!
அமிழ்தூற்றுச் சுனைசுரக்கும்; அன்புமனம் பூக்கும்!
அமைதியெழும்; ஆர்ப்பரித்த புன்மைநிலை நீங்கும்!
தமிழரறம் செழித்தோங்கும்! உலகதனை வாங்கும்!
தாழ்வகலும்! வாழ்வலரும்! தமிழின்பம் அன்றோ?

-1967

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/79&oldid=1512963" இலிருந்து மீள்விக்கப்பட்டது