பக்கம்:கனிச்சாறு 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

இக்காலத் தமிழகத்தில் இருக்கும் தீமை
எதிர்காலத் தமிழகத்தில் இருக்கா தென்பேன்!
திக்காலுக் கோரிருவர் என்றில் லாமல்
திரண்டிருப்பார் தமிழ்த்தலைவர்! தமிழர் கூட்டம்
தக்காரின் மொழி கேட்கும்; தகவே செய்யும்!
தம்கடமை அறமுடிக்கும்; தமிழைக் காக்கும்!
அக்காலிற் குலப்பிரிவு, சமயக் கூச்சல்,
அடிதடிகள் அருவருப்பு அறவே நீங்கும்! 9

தமிழ்ப் பண்பு தலையெடுக்கும்; ஒடுங்கும் கீழ்மை!
தண்டமிழில் பெருங்கலைகள் ஊற்றெடுக்கும்.
உமிழ்தக்க தீயவரும் பிழைஉ ணர்ந்தே
உயர்ந்தோரும் பாராட்டத் திருந்து வார்கள்!
கமழ்பெருக்கும் தமிழ்மனமிவ் வுலக மெல்லாம்!
கன்னியர்க்கும் இளையோர்க்கும் மெய்ம்மைக் காதல்
அமிழ்தூற்றுப் போல் பெருகும்; பெருகும் வாய்மை!
அனைத்துலகும் ஒன்றென்னும் நினைவுண் டாகும். 10

பொருள் மேய்ச்சல் விலகிப்போம்; பொய்செத்துப்போம்;
புத்துலகத் தொடர்புவரும்: அறிவு வீறும்!
இருள் விலகும்; ஒளிபிறக்கும் தமிழர் வாழ்வில்!
ஏமாற்று வெறும்பேச்சு தொலைந்து போகும்.
அருள் மலரும்; அன்பூறும் செயலில் பேச்சில்!
அனைவருமிங் கொருநிறையென் றறம்பி றக்கும்.
மருள்வாழ்க்கை போயொடுங்கும். வறுமை மாயும்
மாளாத இலக்கியங்கள் சுரப்பெடுக்கும்! 11

முடிவாக ஒருசெய்தி! தமிழர் வாழ
முழுவாழ்வும் உழைத்தீர்கள்; மனைவி மக்கள்
விடிவாக ஒருநலமும் தேட வில்லை;
விளைவின்றி அவரின்று வாடு கின்றார்,
அடிவாழைக் கன்றுக்கிங் காக்க மில்லை!
அவர்க்காகக் கண்ணிர்விட் டழுகின் றேன்நான்.
மடியாத தமிழுணர்வே! மலையா நெஞ்சே!
மாளாத புகழ்க்குன்றே! வணங்கு கின்றேன்!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/116&oldid=1424668" இலிருந்து மீள்விக்கப்பட்டது