பக்கம்:கனிச்சாறு 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

ஒருதுறைச் சிறப்பினை வளர்க்க உதவும்!
விலைமகள் நடத்தை கலைகளும் ஆகா!
குலைவுறும் மனத்தை வளப்பமும் செய்யா?
உள்ளத்தைக் 'கல்'வது கலையென உரைக்க!
உளத்தைக் 'கொல்'வது ‘கொலை'யா? 'கலை'யா?

திரைப்படக் கருவியால் எத்தனை செய்யலாம்?
உரைப்பதைக் காட்டிலும் உணர்வதைக் காட்டிலும்
காட்சியால் ஒருவனின் கண்களைத் திறந்து
மீட்சி கொண்டிடத் திரைப்படம் மேலதே! 300
எத்தனை நாடுகள்! எத்தனை மக்கள்!
எத்தனைக் காட்சிகள்! எத்தனை மாட்சிகள்!
அத்தனை யும்போய்ப் படத்தினிலே கொணர்ந்து
எத்தனை மக்களின் விழிகளைத் திறக்கலாம்!

நம்நாடு என்ன? பல்கலைக் கழகமா?
செம்புது வெள்ளமாய்க் கல்விபாய் கின்றதா?
எத்தனைக் காலமாய் இழிந்ததிந் நாடு?
பித்தெனும் சாதிப் பேய்களி னாலும்
சமயச் சாய்க்கடைக் குப்பைகளாலும்
அமைந்த இழிவினை அகற்றவே இன்னும் 310
நூறு நூ றாண்டுகள் செல்லினும் செல்லுமே!
வேறு தீமைகள் விளம்பலும் வேண்டுமோ?
பார்ப்பன நஞ்சு பரப்பிய கொடுமையின்
ஆர்ப்பரிப் பின்னும் அடங்க வில்லையே!

தாளிகைத் துறையில் தான்தோன் றிகள் சில
தூளி பரப்பித் தொலைத்தன தமிழை!

‘கூவ' நீரினைக் குவளை குவளையாய்த்
தூவலில் ஊற்றி எழுதத் தொடங்கின!
இந்தத் தீமையைத் தொலைப்பதும் என்றோ?
கந்தல், உள்ளக் கழிசடை வாழ்க்கை 320
அங்கிங் கென்று நாட்டைஆட் கொண்டது!
இங்கிங் கெல்லாம் நினைவுகள் எழுவதால்
திரைப்படத் துறையைத் தீண்டுவ தில்லென
வரைப்பட நின்றோம்! வருந்தி இருந்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/128&oldid=1424681" இலிருந்து மீள்விக்கப்பட்டது